< Back
மாநில செய்திகள்
கோவை கார் வெடிப்பு: கைதான 5 பேரிடம் 2-வது நாளாக என்ஐஏ அதிகாரிகள் விசாரணை
மாநில செய்திகள்

கோவை கார் வெடிப்பு: கைதான 5 பேரிடம் 2-வது நாளாக என்ஐஏ அதிகாரிகள் விசாரணை

தினத்தந்தி
|
26 Dec 2022 1:33 PM IST

கோவை கார் வெடிப்பு சம்பவத்தில் கைதான 5 பேரிடமும் 2வது நாளாக போலிசார் பாதுகாப்புடன் என்ஐஏ அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கோவை,

கோவை கோட்டை ஈஸ்வரன் கோவில் அருகே கடந்த அக்டோபர் மாதம் 23-ந் தேதி கார் ஒன்று வெடித்து சிதறியது. இதில் காரில் இருந்த உக்கடம் பகுதியை சேர்ந்த ஜமேஷா முபின் உயிரிழந்தார். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்த வழக்கில் தொடர்புடைய முகமது தல்கா, முகமது அசாருதீன், முகமது ரியாஸ், பெரோஸ் இஸ்மாயில், முகமது நவாஸ் இஸ்மாயில், அப்சர்கான் ஆகிய 6 பேரை போலீசார் கைது செய்தனர். இதையடுத்து கோவை கார் வெடிப்பு வழக்கு, தேசிய புலனாய்வு முகமைக்கு(என்.ஐ.ஏ.) மாற்றப்பட்டது.

இதற்கிடையே கோவை கார் வெடிப்பு வழக்கு தொடர்பாக உமர் பரூக், பெரோஸ் கான், முகமது தவ்பிக் ஆகிய 3 பேரை என்.ஐ.ஏ. அதிகாரிகள் கைது செய்தனர். அதன்படி கைதான 9 பேரும் சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டனர். மேலும் இதுதொடர்பான வழக்கு, சென்னை பூந்தமல்லியில் உள்ள என்.ஐ.ஏ. சிறப்பு கோர்ட்டில் நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் முகமது அசாருதீன், பெரோஸ் இஸ்மாயில், உமர் பரூக், பெரோஸ்கான், அப்சர்கான் ஆகிய 5 பேரை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி என்.ஐ.ஏ. அதிகாரிகள் பூந்தமல்லி கோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர். இந்த மனுவை விசாரித்த நீதிபதி, அவர்களை 9 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி அளித்தார்.

இந்த நிலையில், கார் வெடிப்பு வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்டவர்களில் 5 பேரை என்.ஐ.ஏ. அதிகாரிகள் நேற்று கோவை அழைத்து வந்து விசாரணை நடத்தினர். தொடர்ந்து அவர்களிடம் 2-வது நாளாக இன்றும் (திங்கட்கிழமை) என்.ஐ.ஏ. அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். எங்கிருந்து வெடி பொருட்கள் வாங்கினீர்கள், வேறு எங்காவது அசாம்பாவிதங்கள் நிகழ்த்த திட்டமிட்டீர்களா?, இந்த சதி திட்டத்திற்கு வேறு யாரும் உதவி செய்தார்களா? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த விசாரணை முடிந்து வருகிற 29-ந் தேதி அந்த 5 பேரும் பூந்தமல்லி என்.ஐ.ஏ. கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட உள்ளனர்.

மேலும் செய்திகள்