< Back
மாநில செய்திகள்
கோவை கார் வெடிப்பு: தமிழகம் முழுவதும் 45 இடங்களில் என்.ஐ.ஏ. அதிரடி சோதனை முக்கிய ஆவணங்கள் பறிமுதல்
மாநில செய்திகள்

கோவை கார் வெடிப்பு: தமிழகம் முழுவதும் 45 இடங்களில் என்.ஐ.ஏ. அதிரடி சோதனை முக்கிய ஆவணங்கள் பறிமுதல்

தினத்தந்தி
|
10 Nov 2022 1:27 PM IST

கோவை கார் வெடிப்பு தொடரபாக தமிழகம் முழுவதும் 45 இடங்களில் என்.ஐ.ஏ. மீண்டும் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.

கோவை:

கோவையில் நாச வேலைக்கு திட்டமிட்ட ஜமேஷா முபின் என்ற வாலிபர் கார் வெடித்து சிதறி பலியானார். காரில் வெடி பொருட்களை நிரப்பி கியாஸ் சிலிண்டரை பயன்படுத்தி தீபாவளிக்கு முந்தைய நாள் மக்கள் நெருக்கம் நிறைந்த இடத்தில் அதனை வெடிக்கச் செய்து பெரும் உயிரிழப்பை ஏற்படுத்த முபின் திட்டமிட்டு இருந்தார். ஆனால் முபின் திட்டம் பலிக்காமல் அவரது சதித்திட்டத்தில் அவரே சிக்கி உயிரிழந்தார்.

அவரது வீட்டில் இருந்து 75 கிலோவுக்கும் அதிகமான வெடிபொருட்களை போலீசார் கைப்பற்றினர். இது தொடர்பாக போலீசார் அவரது கூட்டாளிகளான முகமது அசாருதீன், முகமது தல்கா, அப்சர்கான், முகமது ரியாஸ், பெரோஸ் இஸ்மாயில், முகமது நவாஸ் இஸ்மாயில் ஆகிய 6 பேரை கைது செய்தனர். இவர்களிடம் நடத்திய விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் தெரியவந்தன.

இதற்கிடையே இந்த வழக்கு என்.ஐ.ஏ.வுக்கு (தேசிய புலனாய்வு முகமை) மாற்றப்பட்டது. என்.ஐ.ஏ. அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணையில் ஈடுபட்டு உள்ளனர்.

இந்த நிலையில் சென்னை, கோவை உள்பட தமிழகம் முழுவதும் 45 இடங்களில் இன்று என்.ஐ.ஏ. அதிகாரிகள் ஒரே நேரத்தில் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். காலை 6 மணிக்கு இந்த சோதனை தொடங்கியது.

கோவையில் கோட்டை மேடு, உக்கடம், பொன்விழா நகர், புல்லுக்காடு, ரத்தின புரி, ஜி.எம்.நகர் உள்பட 33 இடங்களில் சோதனை நடந்தது. பலியான முபின் மற்றும் கைதான 6 பேரின் உறவினர்கள், நண்பர்கள், அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள், தடை செய்யப்பட்ட இயக்கங்களின் ஆதரவாளர்களின் வீடுகள் என 33 இடங்களில் அதிகாலை முதலே அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.

சென்னையில் புதுப்பேட்டை, மண்ணடி, பெரம்பூர், ஜமாலியா உள்பட 5 இடங்களில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். நெல்லையில் 2 இடங்களிலும், திருப்பூரில் ஒரு இடத்திலும், மதுரையில் 2 இடத்திலும், கயல்பட்டினத்தில் ஒரு இடத்திலும் சோதனை நடந்தது.

சோதனை நடந்த சில இடங்களில் இருந்து அதிகாரிகள் முக்கிய ஆவணங்களை கைப்பற்றி உள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் செய்திகள்