< Back
மாநில செய்திகள்
கோவை கார் வெடிப்பு சம்பவம்: கைதான 6 பேரை காவலில் எடுக்க என்.ஐ.ஏ. அதிகாரிகள் நாளை மனுத்தாக்கல்?
மாநில செய்திகள்

கோவை கார் வெடிப்பு சம்பவம்: கைதான 6 பேரை காவலில் எடுக்க என்.ஐ.ஏ. அதிகாரிகள் நாளை மனுத்தாக்கல்?

தினத்தந்தி
|
13 Nov 2022 3:55 PM IST

கோவை கார் வெடிப்பு வழக்கை என்.ஐ.ஏ. அதிகாரிகள் விசாரித்து வருகிறார்கள்.

கோவை,

கோவையில் நடந்த கார் வெடிப்பு சம்பவத்தில் முபின் என்ற வாலிபர் பலியானார். முபினுடன் தொடர்புடைய 6 பேர் கைது செய்யப்பட்டனர். தற்போது இந்த வழக்கை என்.ஐ.ஏ. அதிகாரிகள் விசாரித்து வருகிறார்கள். முதல்கட்டமாக அவர்கள் கார் வெடித்த கோட்டைமேடு ஈஸ்வரன் கோவிலுக்கு சென்று விசாரணை மேற்கொண்டனர்.

தொடர்ந்து முபின் மற்றும் கைதானவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் மற்றும் ஐ.எஸ். இயக்கத்தால் ஈர்க்கப்பட்டவர்களின் வீடுகளில் அதிரடி சோதனை நடத்தினர். கோவையில் 33 இடங்கள் உள்பட தமிழகம் முழுவதும் 43 இடங்களில் இந்த சோதனை நடந்தது. இதில் சில முக்கிய ஆவணங்கள், செல்போன்களை அதிகாரிகள் கைப்பற்றி உள்ளனர்.

இந்த நிலையில், கைதான 6 பேரையும் காவலில் எடுத்து விசாரிக்க என்.ஐ.ஏ. அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். இதன் ஒரு கட்டமாக 6 பேரையும் சென்னை அழைத்துச் சென்று பூந்தமல்லியில் உள்ள என்.ஐ.ஏ. சிறப்பு கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். பின்னர் மீண்டும் அவர்களை கோவை மத்திய ஜெயிலில் அடைத்தனர்.

இதையடுத்து காவலில் எடுத்து விசாரிக்க வேண்டும் என்றால் அதற்கு போதுமான காரணங்கள், ஆதாரங்களை என்.ஐ.ஏ. சிறப்பு கோர்ட்டில் தாக்கல் செய்ய வேண்டும். அப்போது தான் காவல் அனுமதி கிடைக்கும். அதனால் அதற்கான ஏற்பாடுகளில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டு உள்ளனர். அனேகமாக அவர்கள் நாளை கோர்ட்டில் மனுத்தாக்கல் செய்ய அதிகம் வாய்ப்புள்ளது. அல்லது வியாழக்கிழமைக்குள் காவலில் எடுத்து விசாரித்து அடுத்தக்கட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.

6 பேரும் காவலில் எடுத்து விசாரிக்கப்படும் பட்சத்தில் அவர்களது வீடுகள் மற்றும் சதித்திட்டம் தீட்டிய இடங்களுக்கு அவர்களை நேரில் அழைத்துச் சென்று விசாரிக்க என்.ஐ.ஏ. அதிகாரிகள் திட்டம் வகுத்துள்ளனர். இதற்காக கூடுதல் போலீஸ் பாதுகாப்பு கேட்கவும் முடிவு செய்துள்ளனர்.

மேலும் செய்திகள்