< Back
மாநில செய்திகள்
கோவை கார் வெடிப்பு வழக்கு - கைதான 5 பேரிடம் என்.ஐ.ஏ. அதிகாரிகள் விசாரணை
மாநில செய்திகள்

கோவை கார் வெடிப்பு வழக்கு - கைதான 5 பேரிடம் என்.ஐ.ஏ. அதிகாரிகள் விசாரணை

தினத்தந்தி
|
25 Dec 2022 7:27 AM GMT

கோவை கார் குண்டு வெடிப்பு தொடர்பாக என்.ஐ.ஏ. அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கோவை,

கோவை கோட்டை ஈஸ்வரன் கோவில் முன்பு கடந்த அக்டோபர் 23-ந் தேதி கார் குண்டு வெடிப்பு நிகழ்ந்தது. இதில் உக்கடத்தை சேர்ந்த ஜமேஷா முபின் என்பவன் உயிரிழந்தான். இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி முகமது தல்கா, முகமது அசாருதீன், முகமது ரியாஸ், பெரோஸ் இஸ்மாயில், முகமது நவாஸ் இஸ்மாயில், அப்சர்கான் ஆகிய 6 பேரை கைது செய்தனர். தொடர்ந்து அவர்களிடம் விசாரணை நடத்தியதுடன், வீடுகளிலும் சோதனை நடத்தினர். இதற்கிடையே இந்த வழக்கு என்.ஐ.ஏ.வுக்கு மாற்றப்பட்டது.

என்.ஐ.ஏ. அதிகாரிகள் கோவையில் முகாமிட்டு விசாரணை மேற்கொண்டனர். மேலும் கார் குண்டு வெடிப்பு தொடர்பாக தமிழகம் முழுவதும் 40-க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை நடத்தினர். இதற்கிடையே இந்த வழக்கில் தொடர்புடையதாக மேலும் உமர் பாரூக், பெராஸ்கான் உள்பட 3 பேரை என்.ஐ.ஏ. அதிகாரிகள் கடந்த சில வாரங்களுக்கு முன்பு கைது செய்தனர். கைது செய்யப்பட்ட 9 பேரும் சென்னை புழல் ஜெயிலில் அடைக்கப்பட்டனர்.

இந்த நிலையில் கைதான 9 பேரில் முகமது அசாரூதீன், அப்சர்கான், பெரோஸ் இஸ்மாயில், உமர் பாரூக், பெரோஸ்கான் ஆகிய 5 பேரை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கேட்டு என்.ஐ.ஏ. அதிகாரிகள் பூந்தமல்லி என்.ஐ.ஏ. சிறப்பு கோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர். மனுவை விசாரித்த நீதிபதி 5 பேரையும் 9 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி அளித்தார்.மேலும் அவர்களை 29-ந் தேதி கோர்ட்டில் ஆஜர்படுத்தவும் நீதிபதி உத்தரவிட்டார்.

கோர்ட்டு அனுமதி வழங்கியதை தொடர்ந்து என்.ஐ.ஏ. அதிகாரிகள் 5 பேரையும் சென்னை புழல் ஜெயிலில் இருந்து காவலில் எடுத்து ரகசிய இடத்தில் வைத்து விசாரணை மேற்கொண்டனர். மேலும் 5 பேரையும் கோவைக்கு அழைத்து சென்று விசாரணை மேற்கொள்ளவும் திட்டமிடப்பட்டது. அதன்படி நேற்றிரவு என்.ஐ.ஏ. அதிகாரிகள், காவலில் எடுத்த முகமது அசாரூதின், பெரோஸ் இஸ்மாயில், உமர் பாரூக், பெரோஸ் இஸ்மாயில், அப்சர்கான் ஆகிய 5 பேரையும் கோவைக்கு அழைத்து வந்தனர்.

இன்று காலை 5 பேரையும் உக்கடம், ஜி.எம்.நகர், அல்-அமீன் காலனி, புல்லுக்காடு, பிலால் எஸ்டேட், கோட்டைமேடு உள்ளிட்ட பகுதிக்கு அழைத்து சென்றனர். அங்கு குண்டு வெடிப்புக்கு முன்பாக அவர்கள் நின்று பேசிய இடங்கள், கூட்டம் நடத்திய இடங்கள் மற்றும் வீடு உள்ளிட்ட இடங்களுக்கு எல்லாம் நேரில் அழைத்து சென்று விசாரித்தனர். குண்டு வெடிப்பு சம்பந்தமாக என்னென்ன பேசினீர்கள், அதில் யார் எல்லாம் இருந்தீர்கள், இதில் வேறு யாருக்கும் தொடர்பு உள்ளதா என்பது குறித்தும் 5 பேரிடமும் தீவிரமாக விசாரணை மேற்கொண்டனர்.

முபின் மற்றும் அவனது கூட்டாளிகள் குண்டு வெடிப்புக்கு முன்பாக அடிக்கடி சந்தித்து கூட்டங்களையும் நடத்தியுள்ளனர். அந்த இடங்களுக்கும் இவர்களை அழைத்து சென்று விசாரணை நடத்த என்.ஐ.ஏ. அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.

மேலும் செய்திகள்