கோவை கார் வெடிப்பு வழக்கு - கைது செய்யப்பட்ட 6 பேருக்கும் நீதிமன்ற காவல் நீட்டிப்பு...!
|கோவை கார் வெடிப்பு வழக்கில் கைது செய்யப்பட்ட 6 பேருக்கும் வருகிற 6-ந் தேதி வரை காவலை நீட்டித்து என்.ஐ.ஏ. கோர்ட்டு உத்தரவிட்டது.
கோவை,
கோவை கோட்டை ஈஸ்வரன் கோவில் முன்பு கடந்த மாதம் 23-ந்தேதி கார் வெடிப்பு சம்பவத்தில் ஜமேஷா முபின் (வயது28) என்ற வாலிபர் பலியானார். இந்த சம்பவம் தொடர்பாக ஜமேஷா முபின் கூட்டாளிகள் முகமது அசாருதீன், அப்சர் கான், முகமது தல்கா, முகமது ரியாஸ், பெரோஸ் இஸ்மாயில், முகமது நவாஸ் இஸ்மாயில் ஆகிய 6 பேர் கைது செய்யப்பட்டு கோவை சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இவர்கள் 6 பேரையும் கடந்த வாரம் சென்னை பூந்தமல்லியில் உள்ள என்.ஐ.ஏ. சிறப்பு கோர்ட்டில் ஆஜர் படுத்தப்பட்டனர். அப்போது 22-ந் தேதி வரை நீதிமன்ற காவலில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டதையடுத்து 6 பேரும்கோவை சிறையில் அடைக்கப்பட்டனர்.
நேற்றுடன் நீதிமன்ற காவல் முடிந்ததால், 6 பேரையும் மீண்டும் விசாரணைக்கு ஆஜர் படுத்த வேண்டும் என்பதால் பாதுகாப்பு கருதியும் நீண்ட தூரம் அழைத்து வரவேண்டும் என்பதால் கோவை மத்திய சிறையில் இருந்து 6 பேரையும் பூந்தமல்லியில் உள்ள என்.ஐ.ஏ. சிறப்பு நீதிபதி முன்பு காணொலி காட்சி மூலம் ஆஜர்படுத்தினர். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, 6 பேரையும் வருகிற 6-ந்தேதி வரை காவலை நீட்டித்து உத்தரவிட்டார்.