நடிகர் விஜய் குறித்து அவதூறு: கோவை பாஜக பெண் பிரமுகர் மீண்டும் கைது
|முதல்-அமைச்சர் குறித்து அவதூறு கருத்து தெரிவித்ததாக பாஜக பெண் பிரமுகர் ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ளார்.
கோவை,
கோவை மாவட்டம் சிங்காநல்லூர் பகுதியைச் சேர்ந்தவர் உமா கார்கி (வயது 56). இவர் பாரதிய ஜனதா கட்சியின் தீவிர ஆதரவாளர். சமூக வலைதளங்களில் பாரதிய ஜனதா மற்றும் பிரதமர் மோடி தொடர்பான ஆதரவு கருத்துக்களை தொடர்ந்து வெளியிட்டு வந்தார். அதேசமயம் திமுக மற்றும் எதிர்க்கட்சியினர் பற்றியும் கருத்துக்களை பதிவிட்டார்.
குறிப்பாக, தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் குறித்தும், பெரியார், திமுக, குறித்தும் உமா கார்கி தனது சமூகவலைதள பக்கத்தில் தொடர்ந்து அவதூறு கருத்துக்களை பரப்பி வந்தார். இது தொடர்பாக கோவை வடக்கு மாவட்ட திமுக தகவல் தொழில்நுட்ப பிரிவு அமைப்பாளர் ஹரீஷ் என்பவர் அந்த புகாரை அளித்துள்ளார்.
புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த சிங்காநல்லூர் போலீசார் பாஜக பெண் நிர்வாகி உமா கார்கியை கைது செய்தனர். கோவை சிறையில் அடைக்கப்பட்டிருந்த உமார் கார்கி தனக்கு ஜாமின் வழங்கக்கோரி கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். இந்த ஜாமின் மனுவை வரும் 26-ம் தேதிக்கு கோர்ட்டு ஒத்தி வைத்தது.
இந்நிலையில், நடிகர் விஜய் குறித்து அவதூறு கருத்து வெளியிட்டதாக உமா கார்கி மீது விஜய் மக்கள் இயக்கம் சார்பில் சென்னை போலீசில் புகார் அளிக்கப்பட்டது. புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார் உமா கார்கியை கைது செய்தனர்.
கோவை சிறையில் அடைக்கப்பட்டிருந்த உமா கார்கி தற்போது சென்னை அழைத்து வரப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.