பேனர் சரிந்து 3 தொழிலாளிகள் உயிரிழந்த விவகாரம் - 2 பேர் கைது
|பேனர் முறையான அனுமதி பெற்று வைக்கப்பட்டதா ? என்று கருமத்தம்பட்டி நகராட்சி அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கோவை,
கோவை அருகே விளம்பர பேனர் பொருத்தும்போது, 60 அடி உயர இரும்புத்தூண்கள் உடைந்து விழுந்ததில் 3 தொழிலாளர்கள் பரிதாபமாக இறந்தனர். 2 பேர் படுகாயம் அடைந்தனர். பேனர் பலகை சரிந்து விழுந்த விபத்து தொடர்பாக 3 பேர் மீது போலீசார் கொலைவழக்கு பதிவு செய்துள்ளனர். ஒப்பந்ததாரர் பாலாஜி, பழனிச்சாமி, நில உரிமையாளர் ராமசாமி மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
இந்த நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக ஒப்பந்ததாரர் பழனிசாமி, மேற்பார்வையாளர் அருண் ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். தலைமறைவாக உள்ள நில உரிமையாளர் ராமசாமியை போலீசார் தேடி வருகின்றனர். நில உரிமையாளர் ராமசாமி உள்பட 3பேர் மீது 304ஏ ஆகிய பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. பேனர் சாரம் சரிந்த இடத்தில் நகராட்சி ஆணையர் முத்துசாமி நேரில் ஆய்வு செய்தார்.
வழக்கின் முழுவிவரம்:-
கோவை அடுத்துள்ள கருமத்தம்பட்டி வடுகபாளையம் பிரிவு அருகே சாலையோரம், இத்தாலியன் பர்னிச்சர் நிறுவனத்தின் சார்பில் விளம்பர பேனர் அமைக்கும் பணி நடைபெற்றது. இதற்காக 60 அடி உயரத்துக்கு இரும்புத்தூண்கள் அமைக்கப்பட்டு, அதில் இரும்பு தகடுகள் பொருத்தப்பட்டன. இந்த ராட்சத விளம்பர பலகையில், பர்னிச்சர் நிறுவனத்தின் விளம்பர பேனர் பொருத்தும் பணி நேற்று மாலை நடைபெற்றது. இந்த பணியை சேலத்தை சேர்ந்த பழனிசாமி என்பவர் ஒப்பந்தம் எடுத்து செய்து வந்ததாக கூறப்படுகிறது. இரும்புத் தூண்களின் மேல் ஏறி பேனர் பொருத்தும் பணியில் சேலம் மாவட்டத்தை சேர்ந்த 7 தொழிலாளர்கள் ஈடுபட்டு இருந்தனர்.
இந்த நிலையில் நேற்று மாலை 5 மணியளவில் அந்த பகுதியில் பலத்த காற்றுடன் மழை பெய்ய தொடங்கியது. பலத்த காற்று வீசியதால், அந்த இரும்புத்தூண்கள் லேசாக அசைந்தது. இதனால் இரும்புத்தூண்களின் மேல் நின்று பேனர் மாட்டிக் கொண்டு இருந்த தொழிலாளர்கள் அதிர்ச்சி அடைந்தனர். உடனே அவர்கள் அதில் இருந்து கீழே இறங்க முயன்றதாக தெரிகிறது. காற்றின் வேகத்தாலும், தொழிலாளர்கள் ஒரே பகுதியில் இறங்கி யதாலும், 60 அடி உயர இரும்புத்தூண்கள் மெல்ல வளைய தொடங்கியது. இதனால் அச்சத்தில் தொழிலாளர்கள் கூச்சல் போட்டனர்.
இதற்கிடையே தரையில் இருந்து 10 அடி உயரத்தில் இரும்புத் தூண்களின் சில கம்பிகள் பயங்கர சத்தத்துடன் உடைந்தன. இதனால் பாரம் தாங்காமல் அந்த இரும்புத் தூண்கள் மொத்தமாக சாய்ந்து டமார் என்ற சத்தத்துடன் தரையில் விழுந்தது. அப்போது இரும்புத்தூண்களில் இருந்து இறங்கிக்கொண்டு இருந்த தொழிலாளர்களும், காப்பாற்றுங்கள், காப்பாற்றுங்கள் என்று அபயக்குரல் எழுப்பியவாறு, இரும்புத்தூண்களுடன் அவர்களும் விழுந்தனர்.
இதில் இடிபாடுகளுக்குள் சிக்கி அவர்கள் படுகாயம் அடைந்தனர். அவர்கள் வலி தாங்காமல் கூச்சல் போட்டனர். இந்த சம்பவத்தை பார்த்து அந்த வழியாக வாகனங்களில் சென்றவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இடிபாடுகளில் சிக்கியவர்களை, அங்கிருந்த மற்ற தொழிலாளர்கள் மீட்கும் பணியில் ஈடுபட்டனர். இதில் சேலம் மாவட்டம் ஜலகண்டாபுரத்தை சேர்ந்த குமார் (வயது40), சேகர் (45), சேலம் பாரதியார் வீதியை சேர்ந்த குணசேகரன் (52) ஆகிய 3 பேரும் இடிபாடுகளில் சிக்கி ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தது தெரிய வந்தது.
மேலும் இடிபாடுகளில் சிக்கி படுகாயம் அடைந்த அருண்குமார் (40), சண்முகசுந்தரம் (35) ஆகிய 2 பேர், ஆம்புலன்ஸ் மூலம் கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதனிடையே பலியான 3 பேரின் உடல்களும், பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. பின்னர் ராட்சத இரும்புத்தூண்களை பொக்லைன் எந்திரம் மூலம் அகற்றும் பணி நடைபெற்றது.
இது குறித்த தகவலின் பேரில் கருமத்தம்பட்டி போலீஸ் அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினர். வழக்கு இந்த சம்பவம் தொடர்பாக தனியார் ஒப்பந்த நிறுவன உரிமை யாளர் மீது கருமத்தம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதற்கிடையேவிளம்பர பேனர் முறையான அனுமதி பெற்று வைக்கப்பட்டதா ? என்று கருமத்தம்பட்டி நகராட்சி அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள்.