கோவை: கல்லூரியில் ராகிங்கில் ஈடுபட்ட 7 மாணவர்கள் சிறையில் அடைப்பு
|கைதான 7 மாணவர்களையும் அந்த கல்லூரி நிர்வாகம் தற்காலிக நீக்கம் (சஸ்பெண்டு) செய்து உத்தரவிட்டது.
கோவை,
கோவை-அவினாசி சாலையில் உள்ள பீளமேட்டில் பி.எஸ்.ஜி. தொழில்நுட்ப கல்லூரி உள்ளது. மிகவும் புகழ் பெற்ற இந்த கல்லூரியில் கோவை மட்டுமல்லாமல் பல்வேறு பகுதிகளை சேர்ந்த ஏராளமான மாணவ-மாணவிகள் படித்து வருகிறார்கள். வெளியூர்களில் இருந்து வரும் மாணவ-மாணவிகள் தங்கி படிக்க கல்லூரி வளாகத்துக்குள் தனித்தனி விடுதி வசதியும் உள்ளது.
இந்த கல்லூரியில் திருப்பூர் மாவட்டம் அவினாசியை சேர்ந்த ஒரு மாணவர் 2-ம் ஆண்டு என்ஜினீயரிங் படித்து வருகிறார். அவர் கல்லூரியில் உள்ள விடுதியில் தங்கி இருந்து தினமும் கல்லூரிக்கு சென்று வருகிறார்.
கடந்த 6-ந் தேதி இரவில் அந்த மாணவர் தங்கி இருக்கும் அறைக்கு அதே விடுதியில் தங்கி இருந்து 3-ம் மற்றும் 4-ம் ஆண்டு படித்து வரும் மாணவர்கள் 7 பேர் வந்தனர். அவர்கள் 7 பேரும் சேர்ந்து அந்த மாணவரிடம் மது குடிக்க பணம் கேட்டு உள்ளனர்.
அதற்கு அந்த மாணவர், தன்னிடம் பணம் எதுவும் இல்லை என்று கூறி உள்ளார். இதனால் அந்த 7 பேரும், யாரும் இல்லாத மற்றொரு அறைக்கு அந்த மாணவரை அழைத்துச் சென்றனர். மீண்டும் அந்த மாணவரிடம் பணம் கேட்டு தொந்தரவு செய்துள்ளனர். அதற்கு அவர் பணம் இல்லை என்று கூறி உள்ளார்.
இதையடுத்து 7 பேரும் சேர்ந்து அந்த மாணவரை சரமாரியாக தாக்கியதுடன், அவரை மொட்டையடித்து, நிர்வாணப்படுத்தி ராகிங் செய்து உள்ளனர். அத்துடன், அந்த மாணவரின் அலங்கோலத்தை 7 பேரும் சேர்ந்து தங்களின் செல்போனில் வீடியோ மற்றும் புகைப்படம் எடுத்ததுடன், பணம் கொடுக்கவில்லை என்றால் நண்பர்களுக்கு அனுப்பி விடுவோம் என்றும் மிரட்டி உள்ளனர்.
இருந்தபோதிலும் அந்த மாணவர் பணம் கொடுக்காததால், 7 பேரும் சேர்ந்து சிறு ஆயுதங்களால் தாக்கியதுடன், யாரிடமாவது சொன்னால் கொன்று விடுவோம் என்று மிரட்டிவிட்டு அந்த மாணவரை அறையிலேயே விட்டுவிட்டு சென்றனர்.
இதை தொடர்ந்து தனக்கு நடந்த கொடுமை குறித்து அந்த மாணவர் தனது பெற்றோரிடம் கூறி அழுது உள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த அவர்கள் நேற்று காலையில் கோவை வந்தனர்.
பின்னர் அவர்கள் தங்கள் மகனுக்கு நடந்த ராகிங் கொடுமை குறித்து பீளமேடு போலீசில் புகார் செய்தனர். இதையடுத்து போலீசார் நடத்திய விசாரணையில், அந்த கல்லூரியில் 3-ம் மற்றும் 4-ம் ஆண்டு படித்து வரும் மணிகண்டன் (வயது 20), நித்யானந்தன் (20), அய்யப்பன் (21), தரணீதரன் (20), சந்தோஷ் (21), வெங்கடேஷ் (20), யாஜீஸ் (21) ஆகிய 7 பேரும் சேர்ந்து 2-ம் ஆண்டு படித்து வரும் மாணவரிடம் மது குடிக்க பணம் கேட்டு ராகிங் செய்து கொடுமைப்படுத்தியது தெரியவந்தது.
இந்நிலையில் போலீசார் அந்த மாணவர்கள் மீது ராக்கிங் செய்தல், ஆபாசமாக பேசுதல், கொலை மிரட்டல் விடுத்தல் உள்பட 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து 7 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர். தற்போது கைது செய்யப்பட்ட 7 மாணவர்களும் நவம்பர் 22-ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இதனிடையே கைதான 7 மாணவர்களையும் அந்த கல்லூரி நிர்வாகம் தற்காலிக நீக்கம் (சஸ்பெண்டு) செய்து உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.