< Back
மாநில செய்திகள்
கோவை: ராஜஸ்தானில் இருந்து கடத்தி வந்த 20 கிலோ கஞ்சா சாக்லெட் பறிமுதல் - ஒருவர் கைது
மாநில செய்திகள்

கோவை: ராஜஸ்தானில் இருந்து கடத்தி வந்த 20 கிலோ கஞ்சா சாக்லெட் பறிமுதல் - ஒருவர் கைது

தினத்தந்தி
|
31 July 2022 4:50 PM IST

ராஜஸ்தானில் இருந்து கடத்தி வந்த 20 கிலோ கஞ்சா சாக்லெட்டை பறிமுதல் செய்த போலீசார் ஒருவரை கைது செய்தனர்.

கோவை,

கோவை மாநகர பகுதியில் கஞ்சா, போதை மாத்திரை உள்பட போதை பொருட்கள் கடத்தலை தடுக்க போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் உத்தரவின்பேரில் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள்.

இந்த நிலையில் ரத்தினபுரி பகுதியில் கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அவர்கள் சங்கனூர் ரோடு கண்ணப்பன்நகர் அருகே வந்தபோது அங்கு ஒருவர் இருசக்கர வாகனத்தில் நின்று கொண்டு இருந்தார். அந்த இருசக்கர வாகனத்தில் ஒரு சாக்கு மூடையும் இருந்தது.

கூலி தொழிலாளி

உடனே சந்தேகம் அடைந்த போலீசார் அந்த நபரை பிடித்து விசாரணை செய்தனர். அப்போது அவர் முன்னுக்கு பின் முரணான பதிலை தெரிவித்தார். இதை தொடர்ந்து அவர் வைத்திருந்த சாக்கு மூட்டையை பிரித்து பார்த்தனர். அதற்குள் சாக்லெட் பார்சல் இருந்தது. அதை போலீசார் சோதனை செய்தபோது அவை அனைத்தும் கஞ்சா சாக்லெட் என்பது தெரியவந்தது.

இதையடுத்து அந்த நபரிடம் விசாரணை செய்தபோது அவர், கோவை அறிவொளி நகரை சேர்ந்த பாலாஜி (வயது 56) என்பதும் கோவையில் உள்ள காய்கறி சந்தையில் கூலி தொழிலாளியாக வேலை செய்து வருவதும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்ததுடன், அவரிடம் இருந்து 20 கிலோ கஞ்சா சாக்லெட்டை பறிமுதல் செய்தனர்.

16 பேருக்கு வலைவீச்சு

தொடர்ந்து அவரிடம் நடத்திய விசாரணையில் ராஜஸ்தானில் இருந்து கஞ்சா சாக்லெட்டை கடத்தி வந்து அவற்றை கல்லூரி மாணவர்களுக்கு விற்பனை செய்து வருவதும் தெரியவந்தது. மேலும் இந்த வழக்கில் ஸ்டைல் சுரேஷ் என்பவர் கும்பல் தலைவனாக செயல்பட்டு வருவதும் அவர்தான் அனைவருக்கும் கஞ்சா சாக்லெட்டை விற்பனைக்காக கொடுப்பதும் தெரியவந்தது.

இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து இந்த வழக்கில் தொடர்புடைய கும்பல் தலைவனான ஸ்டைல் சுரேஷ் மற்றும் கவுதம், நந்தா, மோசஸ், மற்றொரு கவுதம், விக்கி, வேதா, சந்தோஷ், தீபக், சமீலா, மற்றொரு சந்தோஷ் உள்பட 16 பேரை வலைவீசி தேடி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்