திருச்சி
பலத்த மழையால் ஸ்ரீரங்கம் குடியிருப்பு பகுதியில் தென்னை மரம் விழுந்தது
|பலத்த மழையால் ஸ்ரீரங்கம் குடியிருப்பு பகுதியில் தென்னை மரம் விழுந்தது.
பலத்த மழை
திருச்சி மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் நேற்று காலை முதல் வெப்பம் அதிகமாக இருந்தது. பின்னர் மாலை வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. பின்னர் குளிர்ந்த காற்று வீசியது. சிறிது நேரத்தில் இடியுடன் கூடிய பலத்த மழை பெய்தது. இரவு 7 மணிக்கு தொடங்கிய மழை தொடர்ந்து 3 மணி நேரத்திற்கும் மேலாக பெய்தது. அப்போது இடி, மின்னலும் ஏற்பட்டது.இதைத்தொடர்ந்து திருச்சி மேலப்புதூர் சாலையில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. ஒத்தக்கடை சிக்னல், அரசு மருத்துவமனை ரோடு, உறையூர் செல்லும் சாலை, பாலக்கரை செல்லும் சாலையில் கழிவு நீர் வாய்க்கால்கள் மழையால் நிரம்பி வழிந்தன. சாலை ஓரத்தில் தேங்கி கிடைந்த குப்பைகள் மழை நீரால் சாலை நடுவே அடித்து வரப்பட்டது.
பெருக்கெடுத்து ஓடிய மழைநீர்
திருச்சி, மன்னார்புரம், தில்லைநகர், கோட்டை, சத்திரம், மத்திய பஸ் நிலைய பகுதிகளில் இடியுடன் கூடிய கனமழை பெய்தது. இதனால் பாரதிதாசன் சாலை, மேலரண் சாலை, தெப்பக்குளம், வில்லியம்ஸ் சாலை, உழவா்சந்தை உள்ளிட்ட சாலைப் பகுதிகளிலும், தெருக்களிலும் மழைநீா் பெருக்கெடுத்து ஓடியது. பொதுமக்கள், இருசக்கர வாகனத்தில் சென்றவர்கள் நனைந்தபடி சென்றதால் அவதிக்குள்ளாகினா். முக்கிய சாலைகள், சந்திப்புகளில் வாகனங்கள் ஊா்ந்து சென்றன.
தென்னை மரம் விழுந்தது
ஸ்ரீரங்கம் பகுதியில் பெய்த பலத்த மழையால் வடக்கு அடையவளஞ்சான் வீதியில் கோவில் மதில் சுவர் பகுதியில் உள்ள தென்னை மரம் அருகே உள்ள குடியிருப்பு பகுதியில் உள்ள மின்சார கம்பி மீது விழுந்தது. இதில் மின்சார கம்பி அறுந்து விழுந்தது. இது பற்றி அப்பகுதியினர் ஸ்ரீரங்கம் பகுதியில் உள்ள தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர்.
சம்பவ இடத்திற்கு நிலைய அலுவலர் சக்திவேல் மூர்த்தி தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்றனர். மேலும் அங்கு மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இதையடுத்து மரத்தை அங்கிருந்து வெட்டி அப்புறப்படுத்தினர். இந்த சம்பவத்தில் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை. இந்த மீட்பு பணி 2 மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்றது.