சிவகங்கை
தென்னையில் வெள்ளை ஈ தாக்குதலை கட்டுப்படுத்தும் வழிமுறைகள்
|தென்னையில் சுருள் வௌ்ளை ஈ தாக்குதலை கட்டுப்படுத்தும் முறைகள் குறித்து வேளாண்மை இணை இயக்குனர் தெரிவித்துள்ளார்.
சிவகங்கை
தென்னையில் சுருள் வௌ்ளை ஈ தாக்குதலை கட்டுப்படுத்தும் முறைகள் குறித்து வேளாண்மை இணை இயக்குனர் தெரிவித்துள்ளார்.
பயிர்பாதுகாப்பு
சிவகங்கை வேளாண்மை இணை இயக்குனர் வெங்க டேசுவரன் விடுத்துள்ள செய்தி குறிப்பில் கூறியுள்ளதாவது:-
சிவகங்கை மாவட்டத்தில் சாகுபடி செய்துள்ள தென்னை மரங்களில் தற்போதைய தட்பவெட்பநிலை காரணமாக சுருள் வெள்ளை ஈ தாக்குதல் ஏற்பட வாய்ப்பு உள்ளது. இதற்கு கீழ்கண்ட பயிர்பாதுகாப்பு முறைகளை கடைபிடித்து விவசாயிகள் பயன்பெற தென்னையில் சுருள் வெள்ளை ஈ தாக்கினால் தேன் போன்ற கழிவுகளால் கரும்பூஞ்சாணம் பரவுகிறது.
இதனை கட்டுப்படுத்த தென்னை இலை மட்டைகளில் உள்ள ஓலைகளில் அடிப்புறத்தில் தண்ணீர் நன்குபடுமாறு பீய்ச்சி அடிக்க வேண்டும். கிரைசோபர்லா எனும் இரை விழுங்கிகள் இந்த பூச்சிகளை அனைத்து வளர்ச்சி நிலைகளிலும் நன்றாக உட்கொள்வதால் எக்டேருக்கு 1000 என்ற எண்ணிக்கையில் பாதிக்கப்பட்ட தென்னந் தோப்புகளில் விட வேண்டும்.
கிரைசோபர்லா இரை விழுங்கிகளின் முட்டைகள் பெற சம்பந்தப்பட்ட வேளாண்மை உதவி இயக்குனர்களை தொடர்புகொண்டு அவர்கள் மூலம் பெற்று பயன்பெறலாம். மேலும் ஒரு லிட்டர் நீரில் வேப்ப எண்ணெய் 30 மில்லி அல்லது அசாடிராக்டின் ஒரு மில்லி மருந்தை ஒட்டும் திரவம் கலந்து தென்னை ஓலையின் அடிப்புறம்படுமாறு தெளிக்கவும்.
ஒட்டுப்பொறிகள்
இந்த பூச்சி மஞ்சள் நிறத்தினால் கவரப்படும் என்பதால் மஞ்சள் நிற பேனா ஒட்டுப்பொறிகள் 6 அடி நீளம் 1½ அடி அகலத்தில் தயார் செய்து ஏக்கருக்கு 10 என்ற எண்ணிக்கையில் 10 அடி உயரத்தில் ஆங்காங்கே கட்டி வைத்து பூச்சிகளை கவர்ந்து கட்டுப்படுத்தலாம்.
மேலும் மஞ்சள் நிற பூ பூக்கும், செவ்வந்தி, சூரியகாந்தி போன்ற தாவரங்களை தென்னந்தோப்பில் வளர்த்து பூக்களால் கவரப்படும் இயற்கை எதிரி பூச்சிகள் மூலமும் சுருள் வௌ்ளை ஈயை கட்டுப்படுத்தலாம். மேலும் விவரங்களுக்கு தங்கள் வட்டார வேளாண்மை உதவி இயக்குனர்களை தொடர்பு கொண்டு பயன்பெறலாம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.