திருப்பூர்
நள்ளிரவில் விளைநிலங்களுக்குள் புகுந்த காட்டு யானைகள் அட்டகாசம்
|திருமூர்த்திமலை அருகே நள்ளிரவில் விளைநிலங்களுக்குள் புகுந்த காட்டு யானைகள் மாமரங்கள் மற்றும் தென்னை மரங்களை உடைத்து சேதப்படுத்தியதால் விவசாயிகள் வேதனையடைந்தனர்.
வன விலங்குகள்
உடுமலையையடுத்த மேற்குதொடர்ச்சி மலைப்பகுதியில் உடுமலை, அமராவதி மற்றும் கொழுமம் வனச்சரகங்கள் அமைந்துள்ளது. இங்கு யானை, மான், காட்டெருமை, புலி, சிறுத்தை, கரடி, காட்டுப்பன்றி உள்ளிட்ட ஏராளமான வனவிலங்குகள் வசித்து வருகின்றன. வனப்பகுதியில் போதுமான அளவில் உணவு, குடிநீர் கிடைக்காத நிலையில் யானை, காட்டெருமை, காட்டுப்பன்றி உள்ளிட்ட வனவிலங்குகள் வனப்பகுதியை ஒட்டிய விளைநிலங்களுக்குள் புகுந்து பயிர்களை தின்றும் மிதித்தும் சேதப்படுத்தி வருகின்றன. இதனால் மனித விலங்கு மோதல் ஏற்படுவதுடன், பயிர் சேதம் மற்றும் உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவித்து வருகின்றனர்.
தென்னை மரங்கள் சேதம்
இதனையடுத்து வனஎல்லைப் பகுதியில் அகழி அமைத்தல், முள் வேலி அமைத்தல் போன்ற நடவடிக்கைகளால் வனவிலங்குகளைக் கட்டுப்படுத்த வனத்துறையினர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.ஆனால் பல நேரங்களில் இந்த நடவடிக்கை தோல்வியில் முடிகிறது.இந்தநிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவில் ஒரு குட்டியுடன் 2 காட்டு யானைகள் வனப்பகுதியை விட்டு வெளியேறின.திருமூர்த்திமலையையடுத்த பொன்னாலம்மன்சோலை பகுதியில் உள்ள விளைநிலங்களுக்குள் புகுந்த இந்த யானைகள் மாமரங்களின் கிளைகளை ஒடித்து சேதப்படுத்தின.மேலும் ஏராளமான தென்னை மரங்களை மிதித்து சேதப்படுத்தியும், தின்றும் பாழாக்கின.
பாதுகாப்பற்ற சூழ்நிலை
பின்னர் மீண்டும் வனப்பகுதிக்கு திரும்பிச் சென்றன.இவ்வாறு விளைநிலங்களுக்குள் புகுந்து உணவு தேடும் யானைகள் அதன் சுவைக்கு அடிமையாகி மீண்டும் மீண்டும் விளைநிலங்களுக்குள் நுழையும் அபாயம் உள்ளது.
இதனால் பயிர்களுக்கு மட்டுமல்லாமல் விவசாயிகள் மற்றும் கால்நடைகளின் உயிருக்கும் பாதுகாப்பற்ற சூழ்நிலை நிலவி வருகிறது. எனவே வனவிலங்குகள் வனப்பகுதியை விட்டு வெளியேறுவதைத் தடுக்க வனத்துறையினர் தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.