சென்னை
விசைப்படகில் கரையோரத்தில் மீன்பிடிக்க எதிர்ப்பு: காசிமேட்டில் பைபர் படகு மீனவர்கள் வேலை நிறுத்தம்
|விசைப்படகில் கரையோரத்தில் மீன்பிடிக்க எதிர்ப்பு தெரிவித்து காசிமேட்டில் பைபர் படகு மீனவர்கள் வேலை நிறுத்ததில் ஈடுப்பட்டனர்.
சென்னை காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் இருந்து 500-க்கும் மேற்பட்ட பைபர் படகுகளில் மீனவர்கள் கடலுக்குள் சென்று மீன் பிடித்து வருகின்றனர். காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் இருந்து சுமார் 18 பாகம் தூரத்தில் 300-க்கும் மேற்பட்ட செயற்கை பவளப்பாறைகள் உள்ளன. இந்த பகுதியில் அமைதியான சூழ்நிலை நிலவுவதால் புள்ளி கழா, கூரைத்தாள், கத்தாள உள்பட பெரிய வகை மீன்கள் அதிகமாக காணப்படும். அந்த பகுதியில் பைபர் படகுகளில் செல்லும் மீனவர்கள் தூண்டில் போட்டு மீன் பிடித்து வருவது வழக்கம். ஆனால் சமீப காலமாக மற்ற பகுதிகளில் இருந்து விசைப்படகுகளில் வரும் மீனவர்கள், அதன் அருகே வலை போட்டு மீன்பிடிப்பதால் செயற்கை பவளப்பாறைகள் சேதம் அடைவதுடன், மீன் வளமும் பாதிக்கப்படுகிறது. இதனால் பைபர் படகில் சென்று தூண்டில் போட்டு மீன் பிடிக்கும் மீனவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் ஆழ்கடலில் சென்று மீன் பிடிக்க வேண்டிய விசைப்படகு மீனவர்கள், கரையோரத்தில் மீன் பிடிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து காசிமேடு பைபர் படகு மீனவர்கள் நேற்று வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். அவர்கள் கடலுக்குள் மீன்பிடிக்க செல்லாமல் தங்களது படகுகளில் சிவப்பு கொடி கட்டி கரையோரத்தில் நிறுத்தி இருந்தனர். இது தொடர்பாக பைபர் படகு மீனவர் சங்க நிர்வாகிகள் காசிமேடு மீன்பிடி உதவி இயக்குனர் அஜய் ஆனந்திடம் புகார் மனு அளித்தனர். அந்த புகாரில், விசைப்படகுகளில் பவளப்பாறை அருகே சென்று வலை விரித்து மீன்பிடிக்க தடை செய்ய வேண்டும் என்று தெரிவித்துள்ளனர்.