< Back
தமிழக செய்திகள்
வலையில் சிக்கிய 7 ஆமைகளை மீட்ட இந்திய கடலோர காவல்படையினர்
தமிழக செய்திகள்

வலையில் சிக்கிய 7 ஆமைகளை மீட்ட இந்திய கடலோர காவல்படையினர்

தினத்தந்தி
|
27 March 2023 2:34 AM IST

மன்னார் வளைகுடா கடல் பகுதியில் வலையில் சிக்கி உயிருக்கு போராடிய 7 ஆமைகளை இந்திய கடலோர காவல் படையினர் பாதுகாப்பாக மீட்டு மீண்டும் கடலில் விட்டனர்.

கப்பலில் ரோந்து

ராமநாதபுரம் மாவட்டம் மன்னார் வளைகுடா கடல் பகுதியில் உள்ள தீவுகளை சுற்றி ஆமை, டால்பின், கடல் பசு, நட்சத்திர மீன்கள் உள்ளிட்ட 3600 வகையான அரிய வகை கடல் வாழ் உயிரினங்கள் காணப்படுகின்றன. இவற்றில் ஆமை இனங்களில் பச்சை ஆமை, சித்தாமை, பெருந்தலை ஆமை, தோணி ஆமை உள்ளிட்ட இனங்கள் குறிப்பிடத்தக்கவை. இந்த நிலையில் தூத்துக்குடிக்கும், ராமநாதபுரம் மாவட்டத்திற்கும் இடைப்பட்ட மன்னார் வளைகுடா ஆழ்கடல் பகுதியில் வஜ்ரா என்ற பெரிய ரோந்து கப்பலில் இந்திய கடலோர காவல் படையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர்..

7 ஆமைகள் மீட்பு

அப்போது நடுக்கடலில் மிதந்து கொண்டு இருந்த மீன்பிடி வலையில் சில ஆமைகள் சிக்கி தவித்ததை கப்பலில் இருந்த கடலோர காவல் படையினர் கவனித்தனர். தொடர்ந்து, கப்பலில் இருந்து இறங்கி சிறிய மிதவை படகு மூலம் ஆமைகள் கிடந்த பகுதிக்கு விரைந்து சென்று மீன்பிடி வலைகளில் சிக்கி இருந்த 7 ஆமைகளை பாதுகாப்பாக மீட்டு மீண்டும் கடலில் விட்டனர்.

இந்திய கடலோர காவல் படையினர் காப்பாற்றிய 7 ஆமைகளும் சித்தாமை வகையைச் சேர்ந்தவை என்று கூறப்படுகிறது. ஆழ்கடல் பகுதியில் சேதமடைந்த வலையை மீனவர் யாரோ கடலில் வீசியுள்ளனர். அந்த வலையில் இந்த ஆமைகள் சிக்கி இருக்கலாம் என்று தெரியவருகிறது.

கப்பலில் இருந்து படகில் சென்று கடலோர காவல் படை வீரர்கள், ஆமையை மீட்டது தொடர்பான காட்சிகள் வலைத்தளங்களில் பரவி வருகின்றன.

மேலும் செய்திகள்