தஞ்சாவூர்
கோ-ஆப்டெக்ஸ் மூலம் ரூ.13 கோடி விற்பனை செய்ய இலக்கு
|கோ-ஆப்டெக்ஸ் மூலம் ரூ.13 கோடி விற்பனை செய்ய இலக்கு
தஞ்சை மண்டலத்தில் கோ-ஆப்டெக்ஸ் மூலம் தீபாவளி பண்டிகையை யொட்டி ரூ.13 கோடிக்கு விற்பனை செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்று கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் கூறினார்.
தீபாவளி விற்பனை
தஞ்சை வைரம் நகரில் உள்ள கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையத்தில் தீபாவளி சிறப்பு தள்ளுபடி விற்பனையை கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார். பின்னர் அவர் கூறியதாவது:-
தமிழக அரசின் கூட்டுறவு நிறுவனமான கோ-ஆப்டெக்ஸ் காலத்திற்கேற்ற வகையில் புதிய யுக்திகளை கையாண்டு பல புதிய வடிவமைப்புகளில் சேலைகள் மற்றும் இதர ரகங்கள் உற்பத்தி செய்து தனது விற்பனை நிலையங்கள் மூலம் விற்பனை செய்துவருகிறது.
30 சதவீத தள்ளுபடி
தனது வாடிக்கையாளர்கள் பயன்பெறும் வகையில் ஆண்டுதோறும் தீபாவளி பண்டிகையின்போது 30 சதவீதம் சிறப்புத்தள்ளுபடி விற்பனை திட்டத்தை நடைமுறைப்படுத்தி வருகின்றது. அதன்படி இந்த ஆண்டும் சிறப்பு தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது பல்வேறு ரக பட்டுப்புடவைகள், காட்டன் சேலைகள், கூறை நாட்டு புடவைகள், போர்வைகள். படுக்கை விரிப்புகள், தலையணை உறைகள், வேட்டி, லுங்கி துண்டு ரகங்கள். பருத்தி சட்டைகள், திரைச்சீலைகள், மிதியடிகள், நைட்டிஸ். மாப்பிள்ளை செட் மற்றும் ஏற்றுமதி ரகங்கள் ஏராளமாகத் தருவிக்கப்பட்டுள்ளன.
ரூ.13 கோடி இலக்கு
கடந்த தீபாவளி பண்டிகை காலத்தில் தஞ்சை மண்டலத்தில் ரூ.7 கோடியே 49 லட்சத்து 15 ஆயிரம்விற்பனை செய்யப்பட்டது. இந்த ஆண்டு ரூ.13 கோடி விற்பனை இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. தஞ்சை வைரம் நகர் விற்பனை நிலையத்தில் மட்டும் ரூ.1 கோடியே 70 லட்சம் இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. மேலும் கோ ஆப்டெக்ஸ் நிறுவனம், "கனவு நனவு திட்டம்" என்ற சேமிப்பு திட்டத்தினை செயல்படுத்தி வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த நிகழ்ச்சியில் கோ-ஆப்டெக்ஸ் மண்டல மேலாளர் அம்சவேணி, மேலாளர் (ரகம் மற்றும் பகிர்மானம்) அன்பழகன், வைரம் கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலைய மேலாளர்கள் ஸ்ரீதர், சுரேஷ், தாசில்தார் மணிகண்டன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.