திண்டுக்கல்
கூட்டுறவு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
|தமிழ்நாடு அரசு கூட்டுறவுத்துறை ஊழியர் சங்கம் சார்பில் திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தமிழ்நாடு அரசு கூட்டுறவுத்துறை ஊழியர் சங்கம் சார்பில் திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு சங்கத்தின் திண்டுக்கல் மாவட்ட தலைவர் பொன்னுச்சாமி தலைமை தாங்கினார். செயலாளர் பாஸ்கரன் முன்னிலை வகித்தார். மாநில பொதுச்செயலாளர் பிச்சைவேலு சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார்.
கூட்டுறவுத்துறை ஊழியர்களுக்கு தினமும் காணொலி காட்சி மூலம் ஆய்வுக்கூட்டம் நடத்த கூடாது, கால அவகாசம் இன்றி புள்ளிவிவரங்களை கேட்டு ஊழியர்களை மன அழுத்தத்துக்கு ஆளாக்குவதை கைவிட வேண்டும், கூட்டுறவுத்துறைக்கு தொடர்பு இல்லாத திட்டங்களை திணித்து கூட்டுறவு சங்கங்களை செயலிழக்க செய்வதை தவிர்க்க வேண்டும், பதவி உயர்வில் வெளிப்படை தன்மை வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில், வட்டக்கிளை செயலாளர் ராஜாமணி மற்றும் கூட்டுறவுத்துறை ஊழியர்கள் ஏராளமானோர் கலந்துகொண்டு, தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர். முடிவில் சங்க இணை செயலாளர் வஞ்சிமுத்து நன்றி கூறினார்.