திண்டுக்கல்
கூட்டுறவு வங்கி பணியாளர்கள் 2-வது நாளாக போராட்டம்
|கனரக வாகனங்கள் வாங்குவதை எதிர்த்து கூட்டுறவு வங்கி பணியாளர்கள் 2-வது நாளாக விடுப்பு எடுத்து போராட்டம் நடத்தியதால் ரூ.50 கோடி வர்த்தகம் பாதிக்கப்பட்டது.
2-வது நாளாக போராட்டம்
தமிழகத்தில் 4 ஆயிரத்து 556 தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள் இருக்கின்றன. இந்த சங்கங்களில் பல்நோக்கு சேவை மையம் செயல்படுகிறது. இந்த மையம் மூலம் கனரக வாகனங்களை வாங்கி, மக்களுக்கு வாடகைக்கு விடுவதற்கு கூட்டுறவுத்துறை உத்தரவிட்டது. ஆனால் கனரக வாகனங்களை வாங்கினால், கூட்டுறவு சங்கங்கள் நஷ்டத்தை சந்திக்கும் என்று தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர்கள் சங்கத்தினர் எதிர்ப்பு தெரிவித்தனர்.
மேலும் கனரக வாகனங்கள் வாங்கும் முடிவை கைவிடக்கோரி கடந்த சில நாட்களுக்கு முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதைத்தொடர்ந்து நேற்று முன்தினம் தொடர் விடுப்பு எடுக்கும் போராட்டத்தை தொடங்கினர்.
ரூ.50 கோடி வர்த்தகம் பாதிப்பு
திண்டுக்கல் மாவட்டத்தை பொறுத்தவரை 198 தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள் செயல்படுகின்றன. இவற்றில் பணியாற்றும் பணியாளர்கள் நேற்று முன்தினம் பணிக்கு வராமல் விடுப்பு எடுத்தனர். அதோடு கூட்டுறவு சங்கங்களின் பல்நோக்கு சேவை மையம் மூலம் வாங்கப்பட்ட வாகனங்களுடன் நேற்று முன்தினம் கலெக்டர் அலுவலகம் வந்து போராட்டம் நடத்தினர்.
இந்தநிலையில் நேற்று 2-வது நாளாக 783 பணியாளர்கள் வேலைக்கு வராமல் விடுப்பு எடுத்தனர். இதனால் நகைக்கடன், பயிர்க்கடன் வழங்குதல், உரம் மற்றும் பூச்சி மருந்து விற்பனை உள்பட பல்வேறு பணிகள் பாதிக்கப்பட்டன. அந்த வகையில் மொத்தம் ரூ.50 கோடி வர்த்தகம் பாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.