ஜானகி எம்.ஜி.ஆர். நூற்றாண்டு துவக்க விழாவில் 'பொன்மனச் செம்மல் எம்.ஜி.ஆர்.' நூலை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்
|எம்.ஜி.ஆரின் வாழ்க்கையைப் பற்றிய ‘பொன்மனச் செம்மல் எம்.ஜி.ஆர்.’ என்ற நூலை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்.
சென்னை,
சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள டாக்டர் எம்.ஜி.ஆர் ஜானகி மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி அரங்கில் 'ஜானகி எம்.ஜி.ஆர்.' நூற்றாண்டு துவக்க விழா இன்று நடைபெற்று வருகிறது. இந்த விழாவில் தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டார்.
இந்த நிகழ்ச்சியின் தொடக்கமாக கல்லூரி வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள திருவள்ளுவர் சிலையை முதல்-அமைச்சர் திறந்து வைத்தார். அதைத் தொடர்ந்து அன்னை ஜானகி எம்.ஜி.ஆர். நூற்றாண்டு நினைவு குறுந்தகடு, சிறப்பு மலர் மற்றும் 'பொன்மனச் செம்மல் எம்.ஜி.ஆர்.' என்ற நூலையும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்.
இந்த விழாவில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, உணவுப்பொருள் மற்றும் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி, வீட்டுவசதி துறை அமைச்சர் முத்துசாமி, நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.