< Back
மாநில செய்திகள்
மதுவிலக்கை அமல்படுத்த முதல்-அமைச்சர் முன்வர வேண்டும் - வி.சி.க. தலைவர் திருமாவளவன் வலியுறுத்தல்
மாநில செய்திகள்

'மதுவிலக்கை அமல்படுத்த முதல்-அமைச்சர் முன்வர வேண்டும்' - வி.சி.க. தலைவர் திருமாவளவன் வலியுறுத்தல்

தினத்தந்தி
|
30 April 2023 9:45 PM IST

தானியங்கி மூலம் மதுபான விற்பனைக்கான ஏற்பாட்டை அரசு செய்திருப்பது அதிர்ச்சி அளிக்கிறது என திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

சென்னை,

சென்னையில் தானியங்கி இயந்திரம் மூலம் மதுபானம் விற்பனை செய்யும் திட்டத்தை சோதனை அடிப்படையில் 4 இடங்களில் டாஸ்மாக் நிர்வாகம் அறிமுகப்படுத்தியுள்ளது. மதுபானங்களுக்கு கூடுதல் பணம் வசூலிக்கப்படுவதாக எழுந்த குற்றச்சாட்டுகளை தொடர்ந்து தானியங்கி மது விற்பனை அறிமுகம் செய்யப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், தானியங்கி மது விற்பனை குறித்து முதல்-அமைச்சர் பரிசீலனை செய்ய வேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது;-

"தானியங்கி இயந்திரம் மூலம் மதுபான வகைகளை பெற முடியும் என்ற ஒரு ஏற்பாட்டை அரசு செய்திருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. இவ்வசதியை ஏற்படுத்தித் தருவதில் எந்த நியாயமுமில்லை. தமிழக முதல்-அமைச்சர் இதை பரிசீலிக்க வேண்டும்.

படிப்படியாக மதுவை ஒழிக்க வேண்டும் என்பதில் உடன்பாடு உள்ளது தி.மு.க. இயக்கம். இதை தேர்தல் வாக்குறுதியிலேயே அக்கட்சி உறுதிப்படுத்தி இருக்கிறது. படிப்படியாக மதுவிலக்கை அமல்படுத்த முதல்-அமைச்சர் முன்வரவேண்டும்."

இவ்வாறு திருமாவளவன் தெரிவித்துள்ளார்.


மேலும் செய்திகள்