< Back
மாநில செய்திகள்
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடும் எதிர்ப்பு எதிரொலி; இந்தி திணிப்பு முயற்சிக்கு கேரளா, தெலுங்கானாவும் எதிர்ப்பு
மாநில செய்திகள்

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடும் எதிர்ப்பு எதிரொலி; இந்தி திணிப்பு முயற்சிக்கு கேரளா, தெலுங்கானாவும் எதிர்ப்பு

தினத்தந்தி
|
13 Oct 2022 5:32 AM IST

தமிழகத்தை தொடர்ந்து கேரளா, தெலுங்கானா மாநிலங்களும் இந்தி திணிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளன. கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதி இருக்கிறார்.

இந்தி பேசாத மாநிலங்களில் இந்தி திணிப்பு முயற்சியை மத்திய பா.ஜ.க. அரசு கையில் எடுத்திருப்பது, அந்த மொழி பேசாத மாநிலங்களின் எதிர்ப்புக்கு வழிவகுத்துள்ளது.

இந்தி திணிப்பு முயற்சி

மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா தலைமையிலான அலுவல் மொழி தொடர்பான நாடாளுமன்ற குழு, ஜனாதிபதி திரவுபதி முர்முவிடம் கடந்த மாதம் ஒரு அறிக்கை அளித்தது. அதில், மத்திய அரசின் கல்வி நிறுவனங்களான ஐ.ஐ.டி., ஐ.ஐ.எம்., எய்ம்ஸ் போன்றவற்றிலும், மத்திய பல்கலைக்கழகங்களிலும் கட்டாயமாக இந்தி மொழியே பயிற்று மொழியாக இருக்க வேண்டும்; ஆங்கிலம் உள்ள இடங்களில் இந்தியை இடம்பெற செய்ய வேண்டும் என்று பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக தெரியவந்தது.

இதுகுறித்து பல்வேறு ஊடகங்களில் தகவல்கள் வெளியாகி உள்ளன.

இது இந்தி திணிப்பு முயற்சியாக பார்க்கப்படுவதால், இந்தி பேசாத மாநிலங்களில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் எதிர்ப்பு

இந்த விவகாரத்தில் தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் முதல் எதிர்ப்புக்குரலை பதிவு செய்தார். இந்த முயற்சிக்கு அவர் கடும் கண்டனம் தெரிவித்து ஒரு அறிக்கை வெளியிட்டார். அதில் அவர் கூறி இருந்த முக்கிய அம்சங்கள்:-

* இந்திய துணை கண்டத்தின் பெருமையும், வலிமையும் பன்முகத்தன்மைதான். 'ஒரே நாடு' என்ற பெயரில் ஒரே மொழி, ஒரே மதம், ஒரே உணவு, ஒரே கலாசாரம் என நிறுவிட வேண்டும் என்று மத்திய பா.ஜ.க. அரசு தொடர்ந்து செயல்படுவது, இந்தியாவின் ஒருமைப்பாட்டுக்கு ஊறுவிளைவிக்கக் கூடியதாகும்.

* 'பாரத் மாதா கீ ஜே' என்று நாடாளுமன்ற அவையில் அதனை ஒரு அரசியல் கோஷமாக்கி குரல் எழுப்பிக்கொண்டே இந்திக்கு தாய்ப்பாலும், இந்தியாவின் மற்ற மொழிகளுக்கு கள்ளிப்பாலும் புகட்ட நினைப்பது, இந்திய அரசியல் சட்டத்திற்கு எதிரானது. இந்தியாவின் ஒருமைப்பாட்டுக்கு பேராபத்தை விளைவிக்கக் கூடியது.

* வேற்றுமையில் ஒற்றுமை காணும் தன்மை கொண்ட இந்தியாவில் தமிழ் உள்ளிட்ட மாநில மொழிகளைச் சரிசமமாக நடத்திட வேண்டும். அனைத்து மொழிகளும் மத்திய அரசின் அலுவல் மொழி என்ற நிலையை எட்டிட வேண்டும். அதற்கு நேர் எதிரான மூர்க்கத்தனமான நிலைப்பாட்டை எடுத்து, இந்தியை கட்டாயமாக்க முயன்று, இன்னொரு மொழிப்போரை எங்கள் மீது திணித்திட வேண்டாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.

பிரதமருக்கு பினராயி விஜயன் கடிதம்

இதன் எதிரொலியாக இந்த விவகாரத்தில் கேரள முதல்-மந்திரி பினராயி விஜயனும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் தனது கண்டனத்தை பதிவுசெய்து பிரதமர் மோடிக்கு ஒரு கடிதம் எழுதி உள்ளார். அந்த கடிதத்தில் அவர் கூறி உள்ள முக்கிய அம்சங்கள்:-

* நமது நாட்டில் பல மொழிகள் உள்ளன. அப்படி இருக்கும்போது ஒரு மொழியை மட்டும் நாட்டின் மொழியாக அறிவிக்க முடியாது. உயர்கல்வி நிறுவனங்களில் இந்தியை முக்கிய பயிற்றுமொழி ஆக்க முடியாது.

* இது வேலை தேடுவோர்களையும், மாணவர்களையும் பயத்தில் ஆழ்த்தி உள்ளது. எனவே மத்திய அரசு பணிகளுக்கான போட்டி தேர்வுகளில் வினாத்தாள்கள் அரசியல் சாசனத்தின் 8-வது அட்டவணையில் உள்ள எல்லா மொழிகளிலும் இருக்க வேண்டும்.

* இளைய தலைமுறையினர் தங்கள் தாய்மொழி தவிர்த்து பிற மொழிகளைக் கற்றுக்கொள்ள ஊக்கப்படுத்தலாம். அதே வேளையில் ஒரு மொழியை திணிக்கும் முயற்சி என்பது பொதுவாக மக்களிடமும், குறிப்பாக வேலை தேடுவோர் மத்தியிலும் அச்சத்தை ஏற்படுத்தி விடும்.

'பிரதமர் தலையிட வேண்டும்'

* மற்ற மொழிகளை காட்டிலும், எந்த ஒரு குறிப்பிட்ட மொழியையும் பயிற்றுமொழியாக்க முன்னுரிமை தரக்கூடாது. அப்படி செய்வது திணிப்பாகவே பார்க்கப்படும். அது, நமது கூட்டுறவு கூட்டாட்சி முறைக்கு நல்லதல்ல.

* இந்த விவகாரத்தில் நீங்கள் கூடிய விரைவில் தலையிட்டு, தேவையான, சரிப்படுத்தும் நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்.

இவ்வாறு அதில் பினராயி விஜயன் குறிப்பிட்டுள்ளார்.

தெலுங்கானாவும் எதிர்ப்பு

இந்தி திணிப்பு முயற்சிக்கு தெலுங்கானா மாநிலமும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக, அங்கு ஆளுங்கட்சியாக உள்ள தெலுங்கானா ராஷ்டிர சமிதி கட்சியின் செயல் தலைவரும், முதல்-மந்திரி சந்திரசேகரராவின் மகனுமான கே.டி.ராமாராவ் டுவிட்டரில் ஒரு பதிவு வெளியிட்டுள்ளார்.

அதில் அவர் கூறி இருப்பதாவது:-

இந்தியாவுக்கு தேசிய மொழி என்று ஒன்று கிடையாது. பிற அலுவல் மொழிகளுடன் இந்தியும் ஒன்று. ஐ.ஐ.டி.களிலும், பிற மத்திய வேலை வாய்ப்பு தேர்வுகளிலும், இந்தியை கட்டாயமாக திணிப்பதின்மூலம், பா.ஜ.க. கூட்டணி அரசு கூட்டாட்சி உணர்வினை மீறுகிறது.

மொழியை தேர்வு செய்வதற்கு இந்தியர்களுக்கு வாய்ப்பு இருக்க வேண்டும். இந்தி திணிப்பு கூடாது என்றே நாங்கள் சொல்கிறோம்.

இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

இந்தி திணிப்பு முயற்சிக்கு எதிராக தென் மாநிலங்கள் போர்க்கொடி உயர்த்தி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்