சென்னை
குடும்ப தகராறில் மனைவியை அடித்து கொன்ற துணி வியாபாரி - வலிப்பு நோயால் இறந்ததாக நாடகமாடியது அம்பலம்
|தண்டையார்பேட்டையில் மனைவியை அடித்து கொன்று விட்டு வலிப்பு நோயால் இறந்ததாக நாடகமாடிய துணி வியாபாரி கைது செய்யப்பட்டார்.
சென்னை தண்டையார்பேட்டை நேதாஜி நகர் 2-வது தெருவில் வசித்து வருபவர் சாகுல் அமீது (வயது 30). இவர் சென்னை தியாகராய நகரில் சாலையோர துணிக்கடை வியாபாரம் செய்து வருகிறார். இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த அப்ரின் ரோஸ் (20) என்ற பெண்ணுக்கும் திருமணம் நடந்தது. இந்த தம்பதியர் இருவரும் தனியாக வாடகை வீடு எடுத்து வசித்து வந்த நிலையில், 10 மாத பெண் குழந்தை உள்ளது. இந்த நிலையில், கடந்த 4 நாட்களுக்கு முன்பு வீட்டில் வெகுநேரமாக குழந்தை அழுவதை கேட்ட அக்கம்பக்கத்தினர், ஓடி வந்து சாகுல் அமீதிடம் கேட்டுள்ளனர். அதற்கு அப்ரின் ரோஸ் வலிப்பு நோயால் மயக்க நிலையில் இருப்பதாகவும் அதன் காரணமாக குழந்தை அழுவதாகவும் தெரிவித்ததையடுத்து, அப்ரின் ரோசை தண்டையார்பேட்டையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சேர்த்தனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் மேல் சிகிச்சைக்காக சென்னை ஸ்டான்லி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் ஆப்ரின் ரோஸ் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்த நிலையில், பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து அறிந்த ஆர்.கே.நகர் போலீசார் இளம்பெண் சாவு குறித்து சாகுல் அமீதிடம் விசாரணை நடத்தினர். பின்னர், வலிப்பு நோயால் இறந்து விட்டதாக வழக்கு பதிவு செய்தனர். இதையடுத்து, நேற்று அப்ரின் ரோசின் பிரேத பரிசோதனை அறிக்கை வந்தது. அதில் அவர் அடித்து கொலை செய்யப்பட்டு இருப்பதாக அறிக்கை வெளியானது போலீசாருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இது தொடர்பாக அப்ரின் ரோஸ் தாயார் நிஷா (40) என்பவர் அளித்த புகாரின் பேரில், சாகுல் அமீதை பிடித்து விசாரித்தனர். அதில் அவர் குடும்ப தகராறில் பெற்ற பச்சிளம் குழந்தை கண் எதிரே மனைவியை அடித்து கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். இதைத்தொடர்ந்து வழக்கை கொலை வழக்காக மாற்றிய ஆர்.கே நகர் போலீசார் கணவர் சாகுல் அமீதை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மனைவியை அடித்து கொலை செய்து விட்டு துணி வியாபாரி நாடகமாடிய விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.