செங்கல்பட்டு
மாமல்லபுரத்தில் நுழைவு கட்டண மையங்கள் மூடல்: புராதன சின்னங்களை காண வந்த உள்நாட்டு, வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் அவதி
|மாமல்லபுரத்தில் புராதன சின்னங்களை காண வந்த உள்நாட்டு, வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் நுழைவு கட்டண மையங்கள் மூடியிருந்ததால் அவதியுற்றனர்.
செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள சர்வதேச சுற்றுலா தலமான மாமல்லபுரத்திற்கு நேற்று பல்வேறு இடங்களில் இருந்து ஏராளமான உள்நாட்டு, வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் அதிக அளவில் வந்திருந்தனர். இங்குள்ள நுழைவு கட்டண மைங்களில் பணம் கொடுத்து நுழைவு சீட்டாகவும் அல்லது தங்கள் செல்போனில் ஆன்லைன் மூலம் டிக்கெட் பதிவு செய்யும் நடைமுறை இருந்து வருகிறது.
இந்த நிலையில் நேற்று கடற்கரை கோவில், வெண்ணை உருண்டை பாறை, ஐந்துரதம் ஆகிய 3 புராதன சின்னங்களில் உள்ள மூன்று நுழைவு கட்டண மையங்களும் நுழைவு சீட்டுக்கான பிரிண்ட் பேப்பர் ரோல் தீர்ந்து விட்டதாக கூறி மூடப்பட்டிருந்தது.
இதனால் புராதன சின்னங்களை கண்டுகளிக்க வந்த சுற்றுலா பயணிகளை ஆன்லைன் பரிவர்த்தனை மூலம் நுழைவு சீட்டு பதிவு செய்து வருமாறு தொல்லியல் துறையினர் அறிவுறுத்தினர்.
சமீபத்தின் வெளிநாட்டு பயணிகள் வருகையில் தாஜ்மகாலை பின்னுக்கு தள்ளி மாமல்லபுரம் கடற்கரை கோவில் இந்திய அளவில் அதிக வெளிநாட்டு பயணிகள் கண்டுகளித்தனர் என்ற பெருமையை பெற்றுள்ள நிலையில் பிரிண்டிங் பேப்பர் ரோல் தீர்ந்துவிட்டது என்ற காரணங்களுக்காக நுழைவு சீட்டு மையம் மூடப்பட்டது வேதனை அளிப்பதாகவும், நுழைவு சீட்டு மையம் நிரந்தரமாக செயல்பட ஆவன செய்யவேண்டும் எனவும் சுற்றுலா பயணிகள் மற்றும் சமூக ஆர்வலர்களும் தொல்லியல் துறைக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.