நீலகிரி
பாதாள சாக்கடையில் அடைப்புஊட்டி சாலையில் ஆறாக ஓடும் கழிவுநீர்;பொதுமக்கள் அவதி
|ஊட்டியில், பாதாள சாக்கடையில் அடைப்பு ஏற்பட்டு சாலையில் ஆறாக ஓடும் கழிவுநீரால் பொதுமக்கள் அவதியடைந்து வருகின்றனர்.
ஊட்டி: ஊட்டியில், பாதாள சாக்கடையில் அடைப்பு ஏற்பட்டு சாலையில் ஆறாக ஓடும் கழிவுநீரால் பொதுமக்கள் அவதியடைந்து வருகின்றனர்.
பாதாள சாக்கடையில் அடைப்பு
ஊட்டி நகராட்சியில் 36 வார்டுகள் உள்ளன. இங்கு 1 லட்சத்து 27 ஆயிரத்து 540 பேர் வசித்து வருகின்றனர். மேலும் 500-க்கும் மேற்பட்ட தங்கும் விடுதிகளும், 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வணிக நிறுவனங்களும் உள்ளன. இதுதவிர ஊட்டிக்கு சுற்றுலாவாக தினமும் வழக்கமான நாட்களில் சுமார் 10 ஆயிரம் பேரும், வார விடுமுறை நாட்களில் சுமார் 15 ஆயிரம் பேரும், சீசன் காலங்களில் 25 ஆயிரம் பேரும் வந்து செல்கின்றனர்.
தற்போது ஊட்டியில் கோடை சீசன் முடிந்தும் கோடை சீசனை போல் காலநிலை இன்னும் நிலவுகிறது. இதனால் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிப்பதால் ஊட்டியில் உள்ள தங்கும் விடுதிகள் முழுவதும் நிறைந்து காணப்படுகிறது.
இதற்கிடையே ஊட்டியில் பல்வேறு இடங்களில் பாதாள சாக்கடைகளில் அடைப்பு ஏற்பட்டு சாலைகளில் கழிவுநீர் ஆறாக ஓடுகிறது. இதனால் ஊட்டியில் வசிக்கும் பொதுமக்கள் மற்றும் சுற்றுலா வரும் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகுகின்றனர்.
25-க்கும் மேற்பட்ட வார்டுகள்
குறிப்பாக ஊட்டி- மேட்டுப்பாளையம் சாலை சேரிங்கிராஸ் பகுதி மற்றும் கலெக்டர் அலுவலகத்தில் இருந்து சேரிங்கிராஸ் சாலை வழியாக செல்லும் பாதாள சாக்கடையில் வாரந்தோறும் ஒவ்வொரு இடத்தில் அடைப்பு ஏற்பட்டு கழிவுநீர், சாலையில் ஆறாக ஓடுகிறது. இதனால் துர்நாற்றம் ஏற்பட்டு சுகாதார சீர்கேடு உண்டாகும் அபாயம் உள்ளது.
இதேநிலைதான் 25-க்கும் மேற்பட்ட வார்டுகளிலும் உள்ளதாக கூறப்படுகிறது. இதுகுறித்து சுற்றுச்சூழல் அலுவலர்கள் கூறியதாவது:-
பெரிய அளவிலான குழாய்கள்
ஊட்டியில் கோடை சீசன் நேரத்திலும், மழை பெய்யும் நேரத்திலும் பாதாள சாக்கடையில் அவ்வப்போது அடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் சாலையில் வெளியேறி ஆறுபோல் பெருக்கெடுத்து ஓடி வருகிறது. இதனால் துர்நாற்றம் வீசுவதால் பொதுமக்கள், பள்ளி-கல்லூரிக்கு செல்லுபம் மாணவ, மாணவிகள் முகம் சுளித்துக்கொண்டு, மூக்கை பிடித்தபடி செல்கின்றனர்.மேலும் பொதுமக்களுக்கு நோய் தொற்றும் அபாயமும் இருந்து வருகிறது. ஆங்கிலேயர் காலத்தில் அமைக்கப்பட்ட பாதாள சாக்கடை திட்டத்தில் பாதாள சாக்கடை குழாய்கள் சுமார் 6 இன்ஞ்ச் சுற்றளவில் பதிக்கப்பட்டுள்ளது. இது அன்றைய சூழ்நிலையில் ஊட்டியில் மக்கள் தொகை எண்ணிக்கைக்கு போதுமானதாக இருந்தது.
ஆனால் தற்போது ஊட்டியில் மக்கள் தொகை ஒரு லட்சத்தை தாண்டி உள்ளதால், கழிவுநீர் அதிகளவு சேகரமாகுகிறது. எனவே, பாதாள சாக்கடை குழாய்களை பெரிய அளவில் பதிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இதேபோல் ஓட்டல்கள் மற்றும் வீடுகளின் கழிவறைகளில் நாப்கின் உள்ளிட்ட பொருட்களை போடுவதை பொதுமக்களும், சுற்றுலா பயணிகளும் தவிர்க்க வேண்டும். அப்போதுதான் பாதாள சாக்கடை அடைப்பு பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண முடியும்.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.