புதுக்கோட்டை
செல்போன் கோபுரம் மீது ஏறி விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் போராட்டம்
|கறம்பக்குடியில் வரத்து வாரி ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரி செல்போன் கோபுரத்தில் ஏறி விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரி
புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடியில் ராட்டினா குளம் மற்றும் பங்களா குளம் உள்ளது. இந்த குளங்களுக்கு அம்புக்கோவில் சாலையில் இருந்து டி.இ.எல்.சி. சாலை கச்சேரி வீதி வழியாக வரத்து வாரி வாய்க்கால் உள்ளது. இந்த வரத்து வாய்க்கால் பல ஆண்டுகளாக ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதால் பெரும் மழை பெய்தாலும் இந்த குளங்களுக்கு தண்ணீர் வருவதில்லை. இதனால் ராட்டினா குளத்து பாசனத்தில் இருந்த சுமார் 50 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி இன்றி தரிசாக கிடக்கும் நிலை உள்ளது.
இந்த ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரி விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் மற்றும் பல்வேறு அமைப்புகளின் சார்பில் பல கட்ட போராட்டங்கள் நடத்தப்பட்டன. இருப்பினும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் மதுரை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு ஆக்கிரமிப்புகளை அகற்ற உத்தரவிடப்பட்டது. இருப்பினும் இதுவரை ஆக்கிரமிப்புகள் அகற்றப்படவில்லை.
ெசல்போன் கோபுரத்தில் ஏறி...
இந்நிலையில் நேற்று காலை விடுதலை சிறுத்தைகள் கட்சியின் ஒன்றிய செயலாளர் செல்வரத்தினம், இஸ்லாமிய ஜனநாயக பேரவை மாவட்ட அமைப்பாளர் அப்துல் கனி, இளம் சிறுத்தை பாசறை நகர துணை அமைப்பாளர் குணநீதி ஆகியோர் கறம்பக்குடி அம்புக்கோவில் சாலையில் உள்ள செல்போன் கோபுரம் மீது ஏறி போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது வரத்து வாய்க்கால் ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரி கோஷம் எழுப்பினர்.
இதற்கு ஆதரவு தெரிவித்து விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகள் செல்போன் கோபுரத்திற்கு கீழே நின்று ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனர்.
கோட்டாட்சியர் உறுதி
இதுகுறித்து தகவல் அறிந்த கறம்பக்குடி போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தூர்பாண்டியன் மற்றும் போலீசார் அங்கு விரைந்து சென்று விடுதலை சிறுத்தைகள் கட்சியினரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது வாய்க்கால் ஆக்கிரமிப்புகளை அகற்ற புதுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் உறுதி அளித்துள்ளதாக தெரிவித்து போராட்டத்தை கைவிடும்படி கேட்டுக் கொண்டனர். இதையடுத்து போராட்டத்தை கைவிட்டு விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகள் செல்போன் கோபுரத்தில் இருந்து கீழே இறங்கி வந்தனர். இந்த போராட்டத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.