திருச்சி
மாவட்ட பகுதிகளில் தூய்மை பணிகள்
|திருச்சி மாவட்ட பகுதிகளில் தூய்மை பணிகள் நடந்தது.
தூய்மை பணி
பிரதமர் நரேந்திரமோடியின் வேண்டுகோளை ஏற்று, காந்தி ஜெயந்தியை முன்னிட்டு நேற்று நாடு முழுவதும் தூய்மை இயக்கம் நடைபெற்றது. திருச்சி ஜங்ஷன் ரெயில் நிலையத்தின் 2-வது நுழைவுவாயிலான கல்லுக்குழி பகுதியில் தூய்மை இயக்கம் நடந்தது. இதில் பத்மஸ்ரீ விருது பெற்ற மாராட்சி சுப்புராமன், ரெயில்வே கோட்ட மேலாளர் அன்பழகன் ஆகியோர் கலந்து கொண்டு தூய்மை இயக்கத்தை தொடங்கி வைத்தனர். இந்த தூய்மை பணியானது ஒரு மணி நேரம் நடைபெற்றது. இதில் நூற்றுக்கணக்கான ரெயில்வே பணியாளர்கள் கலந்து கொண்டனர்.இதேபோல் மத்திய தகவல் ஒலிபரப்பு அமைச்சகத்தின் திருச்சி கள அலுவலகம், தேசிய தொழில்நுட்ப கழகம் (என்.ஐ.டி.) இணைந்து வாழவந்தான்கோட்டை பகுதியில் தூய்மை இயக்க பணியை நடத்தினர். தேசிய தொழில்நுட்பக்கழக இயக்குனர் அகிலா தலைமையில் நடந்த நிகழ்ச்சியில் திருச்சி களவிளம்பர அலுவலர் தேவிபத்மநாபன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
விழிப்புணர்வு
திருச்சியில் இந்திய தகவல் தொழில்நுட்பக் கழகம் சார்பில் நடந்த தூய்மை பணியை இயக்குனர் என்.வி.எஸ்.என்.சர்மா தொடங்கி வைத்தார். இதில் சேதுராப்பட்டி பாத்திமா நகரில் உள்ள சுரங்கப்பாதை மற்றும் சர்வீஸ் பாதை பகுதிகளில் உள்ள கழிவுகளை அகற்றி, சுத்தம் செய்தனர்.திருச்சி ஐ.ஐ.எம். சார்பில் மண்டையூர் கிராமத்தில் தூய்மை பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தி, பொது இடங்களை சுத்தமாக வைத்திருக்க அறிவுறுத்தப்பட்டது. திருச்சி தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு சார்பில் திருச்சி-மதுரை சாலையில் உள்ள ஈ.பி.எப்.ஓ. மண்டல அலுவலகத்தில் தூய்மை பணி நடைபெற்றது. இதில் அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.
மணிகண்டம்
மணிகண்டம் ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகம் மற்றும் ஒன்றியத்தில் உள்ள அனைத்து ஊராட்சிகள் கிராம பகுதிகளில் உள்ள பொது இடங்களில் தூய்மை பணி மேற்கொள்ளப்பட்டது. இதில் நாகமங்கலம் ஊராட்சி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் நடைபெற்ற தூய்மை பணியை ஊராட்சி மன்ற தலைவர் வெள்ளைச்சாமி, மத்திய அரசின் பவர் கிரிட் கார்ப்பரேசன் நிறுவன முதுநிலை துணை பொது மேலாளர் தயாளன், துணை பொது மேலாளர் மகேஷ் ஆகியோர் முன்னிலையில் மணிகண்டம் ஒன்றியக்குழு தலைவர் கமலம் கருப்பையா தொடங்கி வைத்தார்.
இதில் நிறுவன பணியாளர்கள், நாகமங்கலம் ஊராட்சி பணியாளர்கள், தூய்மை பணியாளர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டு தூய்மை பணியை மேற்கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை ஒன்றிய தூய்மை சேவை இயக்க ஒருங்கிணைப்பாளர் சசிகுமார், ஊராட்சி செயலாளர் மூர்த்தி ஆகியோர் செய்திருந்தனர்.
துப்பாக்கி தொழிற்சாலை
நெடுஞ்சாலை துறை சார்பில் திருச்சி-புதுக்கோட்டை தேசிய நெடுஞ்சாலையில் குண்டூர் எம்.ஐ.டி. கல்லூரி அருகே நடந்த தூய்மை பணியை நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர் சேதுபதி தொடங்கி வைத்தார். உதவி கோட்ட பொறியாளர்கள் ரவிக்குமார், சத்தியமூர்த்தி, எழிலரசி, உதவி பொறியாளர்கள் மற்றும் தூய்மை பணியாளர்கள் கலந்து கொண்டு குப்பைகளை அகற்றி சுத்தம் செய்தனர்.திருவெறும்பூர் அருகே உள்ள துப்பாக்கி தொழிற்சாலை வளாகத்தில் தூய்மை பணிகள் மேற்கொள்ளப்பட்டன. மேலும் வளாகத்திற்குள் 300 பழ வகை மரக்கன்றுகள் உள்பட மொத்தம் 1,300 மரக்கன்றுகள் நடப்பட்டன. இதில் தொழிற்சாலையின் மேலாண்மை இயக்குனர் ஷைரேஷ்குமார், திருவெறும்பூர் துணை சூப்பிரண்டு அறிவழகன், பழங்காங்குடி ஊராட்சி மன்ற தலைவர் பன்னீர்செல்வம் மற்றும் அதிகாரிகள், ஊழியர்கள் கலந்து கொண்டனர்.
விமான நிலையம்
திருச்சி விமான நிலையத்தில் விமான நிலைய ஆணையக்குழு அதிகாரிகள், ஊழியர்கள், மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் மற்றும் பொதுமக்கள் இணைந்து தூய்மை பணி செய்தனர். இதில் விமான நிலைய இயக்குனர் சுப்பிரமணி தலைமையில் மத்திய தொழில் பாதுகாப்பு படை துணை கமிஷனர் ஹரி சிங் நாயல், துணைப் பொது மேலாளர் கோபாலகிருஷ்ணன், முனைய மேலாளர் சரவணன், சிவக்குமார், குமரன் உள்ளிட்ட அதிகாரிகள் விமான நிலைய வாகன நிறுத்துமிடம் மற்றும் பல்வேறு பகுதிகளில் உள்ள குப்பைகளை அகற்றும் பணியில் ஈடுபட்டனர். மண்ணச்சநல்லூர் ஊராட்சி ஒன்றியம் திருவெள்ளறையில் ஊராட்சி தலைவர் லதா கதிர்வேலு முன்னிலையில். தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக்கழகத்தின் சுற்றுச்சூழல் சங்க மாணவ, மாணவிகள 100 நாள் வேலை திட்ட பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்டோர் திருவெள்ளறை கிராம நிர்வாக அலுவலர் அலுவலகம், புண்டரீகாட்ச பெருமாள் கோவில் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்த புல், பூண்டுகளை அகற்றி சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டனர். இதில், தூய்மை இந்தியா நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளர் டாக்டர் பெருமாள், சுகாதார ஆய்வாளர் பத்மநாபன், சுற்றுச்சூழல் சங்க ஒருங்கிணைப்பாளர் ஜூலி, மாணவர் விவகாரங்கள் துறை துணை தலைவர்கள் டாக்டர் ரவிச்சந்திரன், டாக்டர் பத்மா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.