திருவள்ளூர்
திருவெள்ளைவாயலில் பழமை வாய்ந்த திருவெண்ணீஸ்வரர் கோவிலில் தூய்மை பணி; இந்து சமய அறநிலைத்துறை இணை ஆணையர் ஆய்வு
|மீஞ்சூர் அடுத்த திருவெள்ளைவாயல் கிராமத்தில் திருவெண்ணீஸ்வரர் கோவிலை தூய்மை செய்யும் பணியை இந்து சமய அறநிலைத்துறை இணை ஆணையர் தொடங்கி வைத்து ஆய்வு வைத்தார்.
திருவெண்ணீஸ்வரர் கோவில்
மீஞ்சூர் அடுத்த திருவெள்ளைவாயல் கிராமத்தில் ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த திருவெண்ணீஸ்வரர் கோவில் உள்ளது. சோழ மன்னன் பரந்தக சோழனால் கட்டப்பட்டு வரலாறு புகழ்மிக்கதாக விளங்கும் இக்கோவில் சேதமடைந்து பழுதான நிலையில் பராமரிப்பின்றி இருந்து வருகின்றது. இந்நிலையில் சில நாட்களுக்கு முன்பு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு கோவிலை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் குமரகுருபரன், இணை ஆணையர் லட்சுமணன், பொன்னேரி எம்.எல்.ஏ. துரைசந்திரசேகர் ஆகியோர் உடனிருந்தனர்.
தூய்மை பணி
இந்தநிலையில் பழமை வாய்ந்த இந்த கோவிலில் தூய்மைப்படுத்தி சீரமைக்கும் பணியினை மேற்கொள்ள அமைச்சர் சேகர்பாபு உத்தரவிட்டார். இதனை அடுத்து நேற்று திருவெள்ளைவாயல் திருவெண்ணீஸ்வரர் கோவிலில் சேதம் அடைந்த பகுதிகள் மற்றும் முட்செடிகள் வளர்ந்திருந்த பகுதிகளை அப்புறப்படுத்துவது உள்ளிட்ட தூய்மைப்படுத்தும் பணியை வேலூர் மண்டல இந்து சமய அறநிலைத்துறை இணை ஆணையர் லட்சுமணன் தொடங்கி வைத்தார். பின்னர் அங்கேயே தங்கி பணியினை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். முதற்கட்ட நடவடிக்கையாக தூய்மை பணி முடிந்ததும் சீரமைப்பு பணிகள் தொடங்கப்பட்டு கும்பாபிஷேக பணிகள் விரைவில் ஆரம்பிக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.