பெரம்பலூர்
உலக கழிப்பறை தினத்தை முன்னிட்டு தூய்மை நடைபயணம்
|உலக கழிப்பறை தினத்தை முன்னிட்டு தூய்மை நடைபயணம் சென்றனர்.
வேப்பந்தட்டை:
பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டையை அடுத்துள்ள தொண்டமாந்துறை ஊராட்சியில் உலக கழிப்பறை தினத்தை முன்னிட்டு முழு சுகாதாரத்தை நோக்கி தூய்மை நடைபயணம் மற்றும் உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு ஊராட்சி மன்ற தலைவர் கி.செல்வராஜன் தலைமை தாங்கினார். துணை தலைவர் ரா.மூர்த்தி மற்றும் வார்டு உறுப்பினர்கள் முன்னிலை வகித்தனர். நடைபயண ஊர்வலத்தின்போது கிராமப்புறங்களில் சுகாதாரம் காப்பது, தனிநபர் கழிப்பறையை பயன்படுத்துவது, மக்கும் குப்பை, மக்காத குப்பைகளை தரம் பிரித்து சுகாதார பணியாளர்களிடம் வழங்குவது, நோய்களில் இருந்து பாதுகாப்பது குறித்து துண்டு பிரசுரங்களை பொதுமக்களிடம் வினியோகம் செய்து, விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இந்த நடைபயணத்தில் சுகாதார பணியாளர்கள், மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்கள், ஊக்குவிப்பாளர்கள், அங்கன்வாடி பணியாளர்கள், இளைஞர்கள் மற்றும் பள்ளி மாணவ, மாணவிகள் திரளாக கலந்து கொண்டனர். இதைத்தொடர்ந்து ஊராட்சி மன்ற அலுவலக வளாகத்தில், சுகாதாரத்தை பேணிக்காப்பது குறித்து அனைவரும் உறுதிமொழி எடுத்து கொண்டனர். முடிவில் ஊராட்சி செயலாளர் கலியமூர்த்தி நன்றி கூறினார்.