விழுப்புரம்
அனைத்து பள்ளிகளிலும் தூய்மைப்பணிகளை மேற்கொள்ள வேண்டும்
|விழுப்புரம் மாவட்டத்தில் அனைத்து பள்ளிகளிலும் தூய்மைப்பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்று தலைமை ஆசிரியர்களுக்கு மாவட்ட கலெக்டர் சி.பழனி உத்தரவிட்டுள்ளார்
விழுப்புரம்
விழுப்புரம் மாவட்ட கலெக்டர் சி.பழனி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
பள்ளிகள் திறப்பு
விழுப்புரம் மாவட்டத்தில் அனைத்து அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் தொடக்க, நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகள் கோடை விடுமுறை முடிந்து வருகிற 7-ந் தேதியன்று(புதன்கிழமை) திறக்கப்பட உள்ளது.
இதையொட்டி பள்ளி வளாகம், வகுப்பறைகள், கழிவறைகள், குடிநீர் தொட்டிகள் ஆகியவற்றை தூய்மைப்படுத்த வேண்டும். மின்கசிவை சரிசெய்து பராமரிப்பதோடு ஆபத்தான மரக்கிளைகள் அகற்றப்பட்டிருத்தல் வேண்டும். பள்ளியில் பழுதான கட்டிடத்தில் மாணவர்களை அமரச்செய்யாமல் கட்டாயம் தடுப்பு அமைத்திருத்தல் வேண்டும். நூறு நாள் வேலை திட்டப்பணியாளர்களை பயன்படுத்தி பள்ளிகளில் தூய்மை மற்றும் சுகாதாரப் பணிகளை செய்திருத்தல் வேண்டும்.
தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுரை
மேலும் அனைத்து நிலைகளிலும் பள்ளிகள் தயார் நிலையில் உள்ளனவா என்பதை கண்காணிக்கும்பொருட்டு (சரிபார்ப்பு பட்டியலைக்கொண்டு) விழுப்புரம் மாவட்ட முதன்மை கல்வி அலுவலரின் தலைமையில் 154 அலுவலர்களை கொண்ட குழுவினர், 1,492 அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகளை ஜூன் 1-ந் தேதி (இன்று) முதல் நேரடியாக ஆய்வு செய்ய உள்ளனர்.
எனவே ஆய்வுக்கு முன் அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்களும் மேற்கண்ட பராமரிப்பு பணிகளை முடித்து பள்ளிகள் திறப்பதற்கு தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும்.
இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.