அரியலூர்
மீன்சுருட்டி அரசு பள்ளியில் தூய்மை பணி
|அண்ணாமலை பல்கலைக்கழகம் சார்பில் மீன்சுருட்டி அரசு பள்ளியில் தூய்மை பணி மேற்கொள்ளப்பட்டது.
அண்ணாமலை பல்கலைக்கழகத்தின் சார்பாக கிராம தூய்மை பாரதம் திட்டத்தின் மூலம் அரியலூர் மாவட்டம் மீன்சுருட்டி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மற்றும் குண்டவெளி கிராமத்தில் தூய்மை பணியில் முதுகலை மாணவர்கள் ஈடுபட்டனர். மேலும், கழிப்பறை பயன்பாடுகள் குறித்து கல்வி வளாக தூய்மை மற்றும் சுகாதாரம் சம்பந்தமாக ஆய்வு மேற்கொண்டனர். அதனைத் தொடர்ந்து குண்டவெளி கிராமத்தில் தூய்மை பணி, சுகாதாரம் குறித்து விழிப்புணர்வு, பொதுக்கழிப்பறை பயன்பாடு மற்றும் சுகாதாரம் பற்றி 60-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் ஈடுபட்டனர்.
இதையடுத்து, பள்ளி வளாக கழிவறை மற்றும் பொது சுகாதாரம் குறித்து தலைமை ஆசிரியர் மோகனிடம் தகவல் சேகரித்தனர். மேலும் மேல்நிலை ஆசிரியர் பால சண்முகம் ஆலோசனையின் பேரில் கணினி ஆசிரியர் கிருஷ்ணமூர்த்தி, விவசாய ஆசிரியர் செல்வகுமார் மற்றும் பள்ளியின் நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர் ஜெயபால் ஆகியோர் இணைந்து தூய்மை பாரத இயக்கத்தின் பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை பல்கலைக்கழகத்தின் தூய்மை பாரத திட்ட வகுப்பு பேராசிரியர் பாலமுருகன், ஊரக வளர்ச்சி மையத்தின் இணை பேராசிரியர் மற்றும் ஆராய்ச்சி மாணவர் சாந்தி, அலுவலர் பாலகுரு, மாணவர்கள் பிரசாத், ஜெயக்குமார் ஆகியோர் செய்திருந்தனர்.