< Back
மாநில செய்திகள்
விழுப்புரம் மாவட்டத்தில் பள்ளிகளை தூய்மைப்படுத்தும் பணிகள் தீவிரம்
விழுப்புரம்
மாநில செய்திகள்

விழுப்புரம் மாவட்டத்தில் பள்ளிகளை தூய்மைப்படுத்தும் பணிகள் தீவிரம்

தினத்தந்தி
|
2 Jun 2023 12:15 AM IST

கோடை விடுமுறை முடிந்து வருகிற 7-ந் தேதி பள்ளிகள் திறக்கப்படுவதையொட்டி விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் தூய்மைப்பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது

விழுப்புரம்

பள்ளிகள் திறப்பு

கடந்த 2022-23-ம் கல்வியாண்டில் பள்ளி மாணவர்களுக்கான இறுதி தேர்வுகள் கடந்த ஏப்ரல் மாதம் முடிந்ததை அடுத்து மாணவ, மாணவிகளுக்கு ஒரு மாத காலம் கோடை விடுமுறை விடப்பட்டது. விடுமுறை காலத்தில் மாணவ, மாணவிகள் தங்கள் உறவினர்கள், நண்பர்கள் வீடுகளுக்கு சென்றும், சுற்றுலா சென்றும் பொழுதை கழித்தனர். இந்த நிலையில் கோடை விடுமுறை முடிந்து வருகிற 7-ந் தேதி(புதன்கிழமை) பள்ளிகள் திறக்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை திட்டவட்டமாக அறிவித்தது. இதையடுத்து பள்ளிகளை சுத்தம் செய்து வர்ணம் பூசும்பணி, சீரமைப்பு பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றது.

கலெக்டர் உத்தரவு

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் தூய்மைப்பணியை மேற்கொள்ள வேண்டும் என மாவட்ட கலெக்டர் பழனி தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவு பிறப்பித்து இருந்தார். இதையடுத்து மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் தூய்மைப்பணிகள் நடைபெற்று வருகின்றன. அந்த வகையில் விழுப்புரத்தில் 4 ஆயிரம் மாணவிகள் மட்டும் படிக்கும் அரசு மாதிரி மகளிர் மேல் நிலைப்பள்ளியில் தலைமை ஆசிரியர் சசிகலா தலைமையில் பள்ளி வளாகம், வகுப்பறைகள் துாய்மைப்படுத்தும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

1,806 பள்ளிகளில்

இது குறித்து கல்வித்துறை அதிகாரி ஒருவர் கூறும்போது, விழுப்புரம் மாவட்டத்தை பொறுத்தவரை அரசுப்பள்ளிகள், நகராட்சி பள்ளிகள், நிதி உதவிபெறும் பள்ளிகள், ஆதிதிராவிட நலப்பள்ளிகள், பகுதிநேர நிதி உதவி பள்ளிகள், சிறப்பு பள்ளிகள், மெட்ரிக் பள்ளிகள் என மொத்தம் 1,806 பள்ளிகள் உள்ளன. இந்த பள்ளிகளின் வளாகம், வகுப்பறை, ஆய்வகம், ஆசிரியர், தலைமை ஆசிரியர் அறை, கணினி அறை, குடிநீர் தொட்டி, கழிவறை உள்ளிட்ட அனைத்தும் தூய்மைப்பணியாளர்களை கொண்டு சுத்தம் செய்யும் பணிகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகின்றன. வருகிற 7-ந் தேதிக்கு முன்னதாக இந்த பணிகள் முடிந்துவிடும் என்றார்.

மேலும் செய்திகள்