ராமநாதபுரம்
முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு வகுப்புகள் தொடக்கம்
|அரசு மருத்துவ கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு வகுப்புகள் தொடங்கின.
ராமநாதபுரத்தில் புதிய அரசு மருத்துவ கல்லூரி பிரதமரால் தொடங்கி வைக்கப்பட்ட நிலையில் முதலாம் ஆண்டில் 100 மாணவர்கள் சேர்க்கை நடைபெற்று 100 சதவீத தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளனர். இந்நிலையில் இந்த ஆண்டிற்கான முதலாம் ஆண்டு மாணவர் சேர்க்கைக்கான கவுன்சிலிங் தொடங்கி நடைபெற்று வருகிறது.
இதில் 100 மாணவர்கள் சேர்க்கைக்கு அனுமதி அளிக்கப்பட்டு நடைபெற்ற கவுன்சிலிங்கில் மாநில ஒதுக்கீட்டில் 79 பேரும், அரசு பள்ளிகளில் பயின்றவர்களுக்கான ஒதுக்கீட்டில் 6 பேரும், அகில இந்திய ஒதுக்கீட்டில் 15 பேரும் சேர்ந்துள்ளனர். இவர்கள் கல்லூரி தொடங்கி 3-வது பேட்ச் மாணவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இதனை தொடர்ந்து முதலாம் ஆண்டு மாணவ-மாணவிகளுக்கான பாட வகுப்புகள் நேற்று தொடங்கின. இதற்கான விழா கல்லூரி டீன் செந்தில்குமார் தலைமையில் நடைபெற்றது. துணை முதல்வர் கிறிஸ்ஏஞ்சல் வரவேற்று பேசினார். கல்லூரி முதுநிலை மாணவ- மாணவிகள் புதிதாக வந்த முதலாம் ஆண்டு மாணவர்களை வரவேற்றனர். மருத்துவ கல்லூரி இயக்குனரகத்தின் வழிகாட்டுதலின்படி இவர்களுக்கான பாட வகுப்புகள் நடைபெறும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.