சென்னை
தேர்வில் காப்பி அடித்து பிடிபட்டதால் 9-ம் வகுப்பு மாணவி 2-வது மாடியில் இருந்து குதித்தார் - இடுப்பு எலும்பு முறிந்தது
|தேர்வில் காப்பி அடித்து பிடிபட்டதால் 9-ம் வகுப்பு மாணவி 2-வது மாடியில் இருந்து குதித்து தற்கொலைக்கு முயன்றார். இதில் அவருக்கு இடுப்பு எலும்பு முறிந்தது.
மாமல்லபுரத்தை சேர்ந்தவர் சுரேஷ். இவருடைய மகள் கஜசுபமித்ரா (வயது 14). இவர், மாமல்லபுரம் பூஞ்சேரியில் உள்ள அரசினர் மேல்நிலைப் பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வருகிறார். நேற்று 9-ம் வகுப்பு மாணவர்களுக்கு மாதாந்திர தமிழ் பாட செய்முறை தேர்வு நடைபெற்றது.
மாணவி கஜசுபமித்ரா கையில் பிட் பேப்பர் வைத்துக்கொண்டு தேர்வு எழுதியதாக தெரிகிறது. தேர்வில் அவர் காப்பி அடிப்பதை வகுப்பில் இருந்த ஆசிரியை கையும் களவுமாக பிடித்து, அறிவுரை கூறி கண்டித்தார். அத்துடன் நாளை(அதாவது இன்று) பள்ளிக்கு வரும்போது பெற்றோரை அழைத்து வரும்படி கூறினார்.
இதனால் பதற்றம் அடைந்த மாணவி கஜசுபமித்ரா, யாரும் எதிர்பார்க்காத வகையில் திடீரென பள்ளியின் 2-வது மாடியில் இருந்து கீழே குதித்துவிட்டார். இதில் படுகாயம் அடைந்த மாணவியை ஆசிரியர்கள் மீட்டு செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
அவருக்கு இடுப்பு எலும்பு முறிந்ததால் மேல் சிகிச்சைக்காக சென்னை ராஜூவ்காந்தி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.
இதுபற்றி தகவல் அறிந்ததும் செங்கல்பட்டு மாவட்ட கல்வி அலுவலர் ரோஸ் நிர்மலா பள்ளிக்கு சென்று விசாரணை நடத்தினார். மேலும் இது குறித்து மாமல்லபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.