9-ம் வகுப்பு மாணவி கூட்டு பலாத்காரம்; அண்ணன்-தம்பி உள்பட 5 பேர் கைது
|சேலத்தில் 9-ம் வகுப்பு மாணவியை கூட்டு பலாத்காரம் செய்த அண்ணன்-தம்பி உள்பட 5 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.
சேலம்,
சேலத்தில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 14 வயது சிறுமி 9-ம் வகுப்பு படித்து வந்தாள். இந்த மாணவி மளிகை பொருட்கள் வாங்க தனது வீட்டின் அருகே உள்ள கடைக்கு சென்று வருவது வழக்கம். அந்த கடையில் பெரிய அம்மாபாளையத்தை சேர்ந்த வினித் (வயது 23) என்பவர் வேலை பார்த்து வந்தார்.
கடந்த 25-ந் தேதி மாணவி அந்த கடைக்கு சென்றார். அப்போது அங்கிருந்த வினித், மாணவியிடம் 'உனது அப்பா, தேக்கம்பட்டிக்கு உன்னை அழைத்து வர சொன்னார்' என்று கூறி உள்ளார். இதை உண்மை என நம்பிய மாணவி, வினித்துடன் மோட்டார் சைக்கிளில் சென்றார்.
கூட்டு பலாத்காரம்
தேக்கம்பட்டியில் உள்ள காட்டு பகுதியில் மோட்டார் சைக்கிளை நிறுத்திய வினித், அங்கு மாணவியை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. மேலும் வினித்தின் தம்பியான விக்னேஷ் (21), இவருடைய நண்பர்களான சீனிவாசன் (23), ஆகாஷ் (19), அருண்குமார் (28) ஆகியோர் அங்கு வந்தனர்.
அவர்களும் மாணவியை கூட்டாக பாலியல் பலாத்காரம் செய்ததாக தெரிகிறது. பின்னர் வினித், அந்த மாணவியை தனது மோட்டார் சைக்கிளில் அழைத்து வந்து வீட்டின் அருகே விட்டு விட்டு தப்பிச் சென்று விட்டார்.
5 பேர் கைது
பின்னர் பாலியல் பலாத்காரத்தால் பாதிக்கப்பட்ட மாணவி, இதுகுறித்து தனது பெற்றோரிடம் கூறி கதறி அழுதார். இந்த சம்பவம் குறித்து சூரமங்கலம் அனைத்து மகளிர் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தினர்.
பின்னர் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து வினித், அவருடைய தம்பி விக்னேஷ், சீனிவாசன், ஆகாஷ், அருண்குமார் ஆகிய 5 பேரை கைது செய்தனர்.