திருவள்ளூர்
மீஞ்சூரில் 8-ம் வகுப்பு மாணவர் ஏரியில் மூழ்கி பலி
|மீஞ்சூரில் 8-ம் வகுப்பு மாணவர் சக நண்பர்களுடன் ஏரியில் குளித்தபோது நீரில் மூழ்கி பரிதாபமாக பலியானார்.
திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் அன்பழகன் நகரில் வசிப்பவர் சரத்பாபு. இவரது மகன் ஜெனித் (வயது 14). இவர் அந்த பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வந்தார்.
தற்போது பள்ளிக்கு காலாண்டு விடுமுறை விடப்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று மாலை 4 மணி அளவில் ஜெனித் தான் நண்பர்களுடன் விளையாட செல்வதாக வீட்டாரிடம் கூறிவிட்டு வெளியே சென்றார்.
இதையடுத்து சிறுவன் நண்பர்களுடன் சேர்ந்து புதுப்பேடு கிராமத்திற்கு சென்றார். அங்கு விளையாடி கொண்டிருந்த அவர்கள் அந்த பகுதியில் உள்ள ஏரியில் குளிக்கலாம் என முடிவெடுத்தனர். நண்பர்களுடன் குளித்து கொண்டிருந்த ஜெனித் திடீரென ஆழமான பகுதிக்கு சென்ற நிலையில் நீரில் மூழ்கினார். இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது நண்பர்கள் ஆழமான பகுதிக்கு நீச்சல் அடித்துச் சென்று ஜெனித்தை தேடினர். பின்னர் மயங்கிய நிலையில் அவரை மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர்.
இது குறித்து அந்த வழியாக வந்தவர்களிடம் சிறுவர்கள் கூறினர். உடனே அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து ஜெனித்தை பார்த்தபோது சிறுவன் உயிரிழந்தது தெரிய வந்தது. உடனே இதுகுறித்து அவரது பெற்றோருக்கும், போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த மீஞ்சூர் போலீசார் மாணவன் ஜெனித்தின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பொன்னேரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். பள்ளி மாணவன் உடலை கண்டு அவரது பெற்றோர்கள் கதறி அழுத காட்சி காண்போரை கண் கலங்க செய்தது.