சென்னை
பஸ் மோதி 7-ம் வகுப்பு மாணவன் பலி - தாத்தா படுகாயம்
|மோட்டார்சைக்கிள் மீது அரசு பஸ் மோதிய விபத்தில் 7-ம் வகுப்பு மாணவன் பலியானான். அவனது தாத்தா படுகாயம் அடைந்தார்.
சென்னையை அடுத்த நீலாங்கரை சிவன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் லட்சுமணன் (வயது 70). இவருடைய பேரன் கிஷோர்குமார் (12). இவர், கொட்டிவாக்கத்தில் உள்ள தனியார் பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வந்தார்.
லட்சுமணன் தனது பேரன் கிஷோர்குமாரை அழைத்துக்கொண்டு அப்பகுதியில் உள்ள கடைக்கு சென்றார். பின்னர் மோட்டார்சைக்கிளில் மீண்டும் வீடு திரும்பினார். பாலவாக்கம் பெரியார் சாலை, கிழக்கு கடற்கரை சாலை சந்திப்பு அருகே சென்றபோது பின்னால் வந்த அரசு பஸ்இவர்கள் சென்ற மோட்டார் சைக்கிளின் பக்கவாட்டில் மோதியது.
இதில் லட்சுமணன், கிஷோர்குமார் இருவரும் மோட்டார்சைக்கிளில் இருந்து நிலைதடுமாறி கீழே விழுந்தனர். இதில் படுகாயம் அடைந்த இருவரையும் அங்குள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி நள்ளிரவில் கிஷோர்குமார் பரிதாபமாக உயிரிழந்தார்.
லட்சுமணன் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து அடையாறு போக்குவரத்து புலனாய்வு போலீசார் வழக்குப்பதிவு செய்து அரசு பஸ் டிரைவரான கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூரை சேர்ந்த ஜோதிலிங்கம் (43) என்பவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.