< Back
மாநில செய்திகள்
மீஞ்சூர் அருகே ஏரியில் மூழ்கி 7-ம் வகுப்பு மாணவன் பலி
திருவள்ளூர்
மாநில செய்திகள்

மீஞ்சூர் அருகே ஏரியில் மூழ்கி 7-ம் வகுப்பு மாணவன் பலி

தினத்தந்தி
|
9 May 2023 3:19 PM IST

மீஞ்சூர் அருகே பள்ளி மாணவன் ஏரியில் குளிக்கும் போது சேற்றில் சிக்கி பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் அருகே உள்ள நாலூர் கிராமத்தில் வசிப்பவர் அருள்நிதி (வயது 40). இவரது மகன் பிரேம் (12). இவர் இங்கு உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வந்தார். கோடைகாலத்தை முன்னிட்டு பள்ளிக்கு விடுமுறை விடப்பட்டுள்ளதால் நேற்று சக நண்பர்களுடன் அருகே இந்துஜா நகர் பகுதியில் உள்ள நாலூர் ஏரியில் மாணவன் பிரேம் குளிக்க சென்றார். அப்போது ஏரியில் உள்ள ஆழமான பகுதிக்கு சென்றதால் நீரில் மூழ்கி சேற்றில் சிக்கிக்கொண்டார். இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த சக நண்பர்கள் பெரும் போராட்டத்துக்கு இடையே பிரேமை மீட்டு, கரைக்கு கொண்டு வந்தனர்.

பின்னர் பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கவே, மாணவன் பிரேமை பொன்னேரி அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு மாணவன் பிரேம் உடலை பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். தகவல் அறிந்து வந்த மீஞ்சூர் போலீசார் பள்ளி மாணவன் பிரேமின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பொன்னேரி அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து மீஞ்சூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வரும் நிலையில் அப்பகுதியில் பள்ளி மாணவன் நீரில் மூழ்கி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் செய்திகள்