< Back
தமிழக செய்திகள்
மரத்தில் ஏறி விளையாடியபோது மின்சாரம் தாக்கி 5-ம் வகுப்பு மாணவன் பலி
திருவள்ளூர்
தமிழக செய்திகள்

மரத்தில் ஏறி விளையாடியபோது மின்சாரம் தாக்கி 5-ம் வகுப்பு மாணவன் பலி

தினத்தந்தி
|
29 Sept 2023 6:53 PM IST

ஊத்துக்கோட்டை அருகே மரத்தில் ஏறி விளையாடிய 5-ம் வகுப்பு மாணவன் மின் கம்பியை பிடித்ததால் மின்சாரம் தாக்கி பரிதாபமாக உயிர் இழந்தார்.

5-ம் வகுப்பு மாணவன்

ஊத்துக்கோட்டை அருகே உள்ள முக்கரம்பாக்கம் ஊராட்சிக்கு உட்பட்டது மாம்பேடு காலனி. இந்தப் பகுதியை சேர்ந்தவர் குமார் (வயது 35). சமையல் மாஸ்டராக வேலை செய்து வருகிறார். இவரது மனைவி பூங்கொடி (30). இவர்களுக்கு நிஷா (16), நிதிஷா (12) என்ற இரு மகள்களும், நித்திஷ் (9) என்ற மகனும் இருந்தனர்.

நித்திஷ் தண்டலத்தில் உள்ள அரசு தொடக்கப் பள்ளியில் 5-ம் வகுப்பு படித்து வந்தான். நேற்று மிலாடி நபி என்பதால் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. இந்நிலையில் நித்திஷ் நண்பர்களுடன் சேர்ந்து விளையாட செல்வதாக பெற்றோரிடம் கூறிவிட்டு கயடை பகுதியில் நண்பர்களுடன் விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது ஒரு மரத்தில் நித்திஷ் ஏறினான். அந்த மரத்தின் அருகே அங்கன்வாடி மையம் செயல்பட்டு வருகிறது. மின்கம்பத்தில் இருந்து அங்கன்வாடி மையத்திற்கு செல்லும் மின் கம்பி அந்த மரக் கிளைகள் வழியாக செல்கிறது.

மின்சாரம் தாக்கி பலி

மரத்தில் ஏறிய நித்திஷ் எதிர்பாராத விதமாக அந்த மின் கம்பியை பிடித்தார். உடனே மின்சாரம் தாக்கி மரத்தில் இருந்து சிறுவன் நித்திஷ் தூக்கி வீசப்பட்டார். இதைகண்டு அதிர்ச்சி அடைந்த சக நண்பர்கள் பயத்தில் கூச்சலிட்டனர். சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து நித்திஷை மீட்டு உடனடியாக பெரியபாளையம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

அங்கு நித்திஷை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து ஊத்துக்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து நித்திஷின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் செய்திகள்