12-ம் வகுப்பு மாணவி மர்ம மரணம்; சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் - விஜயகாந்த்
|12-ம் வகுப்பு மாணவி மர்ம மரணம் குறித்த வழக்கை சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என விஜயகாந்த் வலியுறுத்தி உள்ளார்.
சென்னை,
தே.மு.தி.க. நிறுவனத் தலைவர் விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் அருகே கனியாமூர் பகுதியில் உள்ள தனியார் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில், விடுதியில் தங்கி பயின்று வந்த கடலூர் மாவட்டம் பெரியநெசலூர் கிராமத்தை சேர்ந்த 12-ம் வகுப்பு மாணவி ஒருவர் 2 தினங்களுக்கு முன்பு மர்மமான முறையில் உயிர் இழந்தார்.
மாணவி மரணத்தில் மர்மம் இருப்பதாக கூறி அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் கடந்த 2 நாட்களாக சாலை மறியல் உள்ளிட்ட பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.ஆனால், இந்த வழக்கை விசாரித்து வரும் போலீஸ் அதிகாரிகள் பள்ளி நிர்வாகத்துக்கு சாதகமாக செயல்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
எனவே, இந்த வழக்கை சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு மாற்ற தமிழக அரசு உத்தரவிட வேண்டும். மாணவியை இழந்து வாடும் அவரது குடும்பத்தாருக்கு உரிய நீதி கிடைக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.