12-ம் வகுப்பு மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை:குற்றவாளிகளை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும்- தமிழக வாழ்வுரிமைக் கட்சி வலியுறுத்தல்
|விழுப்புரம் அருகே கூட்டு பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்ட குற்றவாளிகள் 3 பேரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என்று வேல்முருகன் தெரிவித்துள்ளார்.
சென்னை,
தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் தி.வேல்முருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
விழுப்புரம் அருகே செங்கமேடு பகுதியில் 12-ம் வகுப்பு மாணவி, தனது சக பள்ளி மாணவனுடன் பேசிக் கொண்டிருந்துள்ளார். அப்போது, அங்கு வந்த 3 பேர் கொண்ட கும்பல், மாணவனை தாக்கி விட்டு, மாணவியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். இந்த நிகழ்வு கடும் அதிர்ச்சி அளிக்கிறது.
பின்னர், மாணவனை 3 பேர் கொண்ட கும்பல் கத்தியால் வெட்டிவிட்டு வெள்ளிப்பொருட்கள், செல்போன் ஆகியவற்றை பறித்து சென்றுள்ளனர். தாக்குதலில் காயம் அடைந்த மாணவன், மாணவி முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக ஊடகங்கள் வாயிலாக அறிய முடிகிறது.
பெண்களுக்கு எதிராக குற்றம் இழைக்கும் குற்றவாளிகள் பெரும்பாலும் போதைக்கு அடிமையாகி இருப்பதும், மது அருந்தி இருப்பதும், பல வழக்குகளில் நாம் காணும் ஒரு நிலை. வீதிதோறும் இருக்கக்கூடிய மதுபானக் கடைகள் ஆண்களின் உயிரை மட்டும் கொல்வதில்லை, பெண்களுக்கு எதிராகவும் செயல்படுகின்றது.
எனவே, தமிழ்நாட்டில் அதிகரித்து வரும் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்முறைகளை தடுக்க தமிழ்நாடு அரசு முன் வர வேண்டும். விழுப்புரம் அருகே கூட்டு பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்ட குற்றவாளிகள் 3 பேரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.