10, 11, 12-ம் வகுப்பு துணைத்தேர்வு, மறுகூட்டல் முடிவுகள் நாளை வெளியீடு
|10, 11, 12-ம் வகுப்பு துணைத்தேர்வு, மறுகூட்டல் முடிவுகள் நாளை வெளியிடப்படுகிறது.
சென்னை,
அரசு தேர்வுகள் இயக்ககம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
நடைபெற்று முடிந்த ஜூன், ஜூலை 2024, பிளஸ்-2, பிளஸ்-1, 10-ம் வகுப்பு துணைத்தேர்வுகள் எழுதி, மறுகூட்டல் மற்றும் மறுமதிப்பீடு கோரி விண்ணப்பித்தவர்களுக்கு, மதிப்பெண் மாற்றம் உள்ள தனித்தேர்வர்களது பதிவெண்களின் பட்டியல் www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் நாளை (வெள்ளிக்கிழமை) அன்று பிற்பகல் வெளியிடப்பட உள்ளது.
இப்பட்டியலில் இடம் பெறாத பதிவெண்களுக்கான விடைத்தாட்களில் எவ்வித மதிப்பெண் மாற்றமும் இல்லை எனத் தெரிவிக்கப்படுகிறது. மறுகூட்டல், மறுமதிப்பீட்டில் மதிப்பெண் மாற்றம் உள்ள தனித்தேர்வர்கள் மட்டும், மேற்குறிப்பிட்ட இணையதளத்தில் தங்களது பதிவெண் மற்றும் பிறந்த தேதி ஆகிய விவரங்களை பதிவு செய்து தங்களுக்கான திருத்தப்பட்ட மதிப்பெண்கள் அடங்கிய மதிப்பெண் பட்டியல் தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
மேலும், பிளஸ்-2, 10-ம் வகுப்பு துணைத் தேர்வெழுதிய தனித்தேர்வர்களுக்கு அசல் மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படும் தேதி குறித்து பின்னர் அறிவிக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.