ஈரோடு
ஈரோட்டில் 10-ம் வகுப்பு மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை; நன்றாக படிக்க தாய் வற்புறுத்தியதால் விபரீத முடிவு
|ஈரோட்டில் நன்றாக படிக்க தாய் வற்புறுத்தியதால் 10-ம் வகுப்பு மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
ஈரோட்டில் நன்றாக படிக்க தாய் வற்புறுத்தியதால் 10-ம் வகுப்பு மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
10-ம் வகுப்பு மாணவர்
ஈரோடு இடையன்காட்டுவலசு சின்னமுத்து வீதியை சேர்ந்தவர் உதயகுமார். தனியார் மில் ஊழியர். இவருடைய மனைவி கஸ்தூரி. இவர்களுடைய மகன்கள் மணிகண்டன் (வயது 15), தனியரசு (12). இதில் மணிகண்டன் அந்த பகுதியில் உள்ள அரசு பள்ளிக்கூடத்தில் 10-ம்வகுப்பு படித்து வந்தார்.
காலாண்டு விடுமுறை முடிந்து நேற்று முன்தினம் பள்ளிக்கூடம் திறக்கப்பட்டது. அப்போது காலாண்டு தேர்வுக்கான மதிப்பெண்கள் மாணவர்களிடம் தெரிவிக்கப்பட்டது.
இந்த மதிப்பெண் விவரங்களை மணிகண்டன் தனது தாய் கஸ்தூரியிடம் தெரிவித்து உள்ளார். அதற்கு மதிப்பெண் குறைவாக உள்ளதாகவும், நன்றாக படிக்க வேண்டும் என்று மணிகண்டனை கஸ்தூரி வற்புறுத்தியதாக கூறப்படுகிறது. இதனால் மணிகண்டன் மனவேதனை அடைந்தார்.
தற்கொலை
இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலையில் வீட்டில் யாரும் இல்லாதபோது மணிகண்டன் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். பின்னர் வெளியில் சென்றிருந்த கஸ்தூரி வீடு திரும்பியபோது மகன் தூக்கில் பிணமாக தொங்குவதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்த தகவல் கிடைத்ததும் ஈரோடு அரசு ஆஸ்பத்திரி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று மணிகண்டனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மணிகண்டனின் உடலை பார்த்து பெற்றோர், உறவினர்கள் கதறி அழுதது பரிதாபத்தை ஏற்படுத்தியது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தாய் படிக்க வற்புறுத்தியதால் மாணவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.