கரூர்
வீடு புகுந்து 10-ம் வகுப்பு மாணவர் தாக்குதல்
|கரூரில் வீடு புகுந்து 10-ம் வகுப்பு மாணவர் தாக்கப்பட்டார். இதுதொடர்பாக கல்லூரி மாணவர்கள் உள்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
நாங்குநேரி சம்பவம்
நெல்லை மாவட்டம், நாங்குநேரி பெருந்தெருவை சேர்ந்த பிளஸ்-2 மாணவர் சின்னத்துரை, அவருடைய தங்கை சந்திரா செல்வி ஆகியோர் மாணவர்கள் உள்ளிட்டோரால் வீடு புகுந்து அரிவாளால் வெட்டப்பட்டனர். இதில் பலத்த காயம் அடைந்த அவர்கள் பாளையங்கோட்டை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மாணவர்களுக்குள் ஏற்பட்ட பிரச்சினையில் நடந்த இந்த சம்பவம் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது. அந்த பரபரப்பு அடங்குவதற்குள் தற்போது மீண்டும் அதுபோன்ற தாக்குதல் சம்பவம் கரூர் மாவட்டம், ஜெகதாபி பகுதியில் நடந்துள்ளது.
அதுபற்றிய விவரம் வருமாறு:-
பஸ்சில் கைகலப்பு
கரூர் மாவட்டம், ஜெகதாபி பகுதியை சேர்ந்த 14 வயது மாணவர் ஒருவர் உப்பிடமங்கலம் அரசு மேல்நிலைப் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வருகிறான். இவன் கடந்த 23-ந்தேதி மாலை பள்ளி முடிந்து வீட்டுக்கு பஸ்சில் சென்று கொண்டிருந்தான்.
அப்போது அதே பஸ்சில் பயணம் செய்த புலியூர் அரசு உதவி பெறும் பள்ளியில் 12-ம் வகுப்பு படிக்கும் மாணவர் ஒருவருக்கும், 10-ம் வகுப்பு மாணவருக்கும் இடையே பஸ்சில் இடம் பிடிப்பது தொடர்பாக பிரச்சினை ஏற்பட்டு கைகலப்பானது.
வீடு புகுந்து தாக்குதல்
இந்தநிலையில் கடந்த 24-ந்தேதி 10-ம் வகுப்பு படிக்கும் மாணவரின் வீட்டிற்குள் கும்பலாக புகுந்த மாணவர்கள் சிலர் 10-ம் வகுப்பு மாணவன் மற்றும் அவரது பாட்டியிடம் தகராறில் ஈடுபட்டு கைகளால் சரமாரியாக தாக்கி உள்ளனர். இதில் மாணவன் மற்றும் பாட்டி ஆகியோர் காயம் அடைந்தனர். இதையடுத்து காயம் அடைந்த 2 பேைரயும் உறவினர்கள் மீட்டு கரூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
4 பேர் கைது
இந்த தாக்குதல் தொடர்பாக 10-ம் வகுப்பு மாணவனின் உறவினர்கள் வெள்ளியணை போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில், போலீசார் வழக்குப்பதிந்து, 19 வயதுடைய கல்லூரி மாணவர்கள் 2 பேர், 17, 14 வயதுடைய பள்ளி மாணவர்கள் 2 பேர் என மொத்தம் 4 பேரை கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.