< Back
மாநில செய்திகள்
வயிற்று வலிக்காக ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட 10-ம் வகுப்பு மாணவி சாவு
சென்னை
மாநில செய்திகள்

வயிற்று வலிக்காக ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட 10-ம் வகுப்பு மாணவி சாவு

தினத்தந்தி
|
3 Nov 2022 12:10 PM IST

வயிற்று வலிக்காக ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட 10-ம் வகுப்பு மாணவி உயிரிழந்தார். தவறான சிகிச்சையால் தங்கள் மகள் இறந்ததாக போலீசில் பெற்றோர் புகார் செய்தனர்.

சென்னை தண்டையார்பேட்டை எம்.பி.டி. காலனியை சேர்ந்தவர் ரமேஷ். இவர், சென்னை துறைமுகத்தில் வேலை செய்து வருகிறார். இவருடைய மனைவி வசந்தி. இவர்களுடைய மகள் நந்தினி (வயது 15). இவர், தண்டையார்பேட்டையில் உள்ள தனியார் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார்.

ரமேஷ்-வசந்தி தம்பதிக்கு நந்தினி ஒரே மகள் ஆவார். திருமணமாகி 10 ஆண்டுகள் கழித்துதான் இவர்களுக்கு நந்தினி பிறந்துள்ளார். இதனால் நந்தினியை இருவரும் மிகவும் பாசத்துடன் வளர்த்து வந்தனர்.

இந்த நிலையில் நந்தினி தீராத வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தார். இதற்காக 2 நாட்களுக்கு முன்பு அவரை சென்னை மண்ணடியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

அங்கு சிகிச்சை பெற்று வந்த நந்தினி, நேற்று சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்துவிட்டார்.

இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த பெற்றோர், மகளின் உடலை பார்த்து கதறி அழுதனர்.

மேலும் நந்தினியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் டாக்டர்களின் தவறான சிகிச்சையால்தான் நந்தினி இறந்து விட்டதாக கூறி தனியார் ஆஸ்பத்திரியை முற்றுகையிட்டு டாக்டரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து தகவல் அறிந்து வந்த வடக்கு கடற்கரை போலீசார், முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது நந்தினியின் பெற்றோர், தங்கள் மகளுக்கு ஆஸ்பத்திரியில் தவறான சிகிச்சை அளித்ததால் ஒரே மகளை இழந்து விட்டோம். ஆஸ்பத்திரி நிர்வாகம் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகார் அளித்தனர்.

இதுபற்றி வடக்கு கடற்கரை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்