கோவில் திருவிழாவில் இரு பிரிவினருக்கு இடையே மோதல்: கடைகள், வாகனங்களுக்கு தீ வைப்பு
|சேலம் மாவட்டம் தீவட்டிப்பட்டி அருகே நடந்த கோவில் திருவிழாவில் இரு பிரிவினருக்கு இடையே மோதல் ஏற்பட்டது.
சேலம்,
சேலம் மாவட்டம் தீவட்டிப்பட்டியில் உள்ள மாரியம்மன் கோவிலில் இன்று திருவிழா நடைபெற்று வருகிறது. இத்திருவிழாவில் ஒரு பிரிவினர் மற்றொரு பிரிவினரை கோவிலுக்குள் அனுமதிக்கவில்லை என கூறப்படுகிறது. இதன் காரணமாக முதலில் வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில், பின்னர் மோதலாக மாறியது.
இந்த மோதல் காரணமாக அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. கோவில் திருவிழா நடைபெறும் இடத்திற்கு அருகே உள்ள கடைகள் மற்றும் வாகனங்களுக்கு மோதலில் ஈடுபட்டவர்கள் தீ வைத்ததால் அப்பகுதி கலவரம் நிறைந்த பகுதியாக காணப்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்து வந்த போலீசார், மோதலில் ஈடுபட்டவர்களிடம் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது காவல்துறையினர் மீதும் கல் வீசப்பட்டதால் பதற்றமான சூழல் ஏற்பட்டது.
இந்த நிலையில் தற்போது தீவட்டிப்பட்டி முழுவதும் காவல்துறையினர் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. மேலும் மோதலில் ஈடுபட்ட இருதரப்பினரையும் அப்பகுதியில் இருந்து அப்புறப்படுத்தும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர். மோதலின் காரணமாக கோவில் திருவிழா நிறுத்தப்பட்டது.