ஆடல்-பாடல் நிகழ்ச்சியில் மோதல்; விவசாயி வெட்டிக்கொலை
|கோவில் திருவிழாவில் நடந்த ஆடல்-பாடல் நிகழ்ச்சியில் இருதரப்பினர் இடையே மோதல் ஏற்பட்டது. இதில் விவசாயி வெட்டிக்கொலை செய்யப்பட்டார்.
ஆடல்-பாடல் நிகழ்ச்சி
ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே பெருநாழியில் உள்ள நிறைகுளத்து வள்ளியம்மன் கோவில் திருவிழா ஒரு வாரத்திற்கு மேலாக நடைபெற்று வருகிறது.
திருவிழாவை முன்னிட்டு நேற்று முன்தினம் நள்ளிரவில் ஆடல்-பாடல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதை பார்க்க பொந்தம்புளி கிராமத்தை சேர்ந்த முத்துராமலிங்கம் (வயது 38), இடிவிலகியை சேர்ந்த விவசாயி முனியசாமி (40) மற்றும் இதயராஜா (35) ஆகிய 3 பேர் சென்றுள்ளனர். இவர்கள் ஆடல்-பாடல் நிகழ்ச்சியை ஆரவாரம் செய்து பார்த்துக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. இதனால் பெருநாழியை சேர்ந்த சிலர் அங்கு வந்து, அவர்கள் 3 பேருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின்னர் இருதரப்பினருக்கும் அடிதடி ஏற்பட்டு, அரிவாள் மற்றும் ஆயுதங்களுடன் மோதிக்கொண்டனர்.
வெட்டிக்கொலை
இதில் இடிவிலகியை சேர்ந்த முனியசாமி அரிவாளால் வெட்டப்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மற்ற அனைவரும் லேசான காயம் அடைந்ததாக கூறப்படுகிறது. இது குறித்து தகவல் அறிந்து வந்த பெருநாழி போலீசார், முனியசாமியின் உடலை பரிசோதனைக்காக கமுதி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். முனியசாமிக்கு பாண்டிச்செல்வி என்ற மனைவியும், ஒரு மகன், மகளும் உள்ளனர்.
8 பேர் கைது
இந்த சம்பவம் தொடர்பாக 10 பேர் மீது வழக்குப்பதிவு செய்து முத்துராமலிங்கம், இதயராஜா, அஜய், சரவணன், கிஷோர், ஓம் பிரகாஷ், பொன்ராஜ், கமலேசுவரன் ஆகிய 8 பேரை போலீசார் கைது செய்தனர்.
ஆடல்-பாடல் நிகழ்ச்சியில் நடந்த மோதலில் விவசாயி கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.