திருவள்ளூர்
திருவாலங்காடு அருகே இரு தரப்பினரிடையே மோதல்; 4 பேருக்கு கத்திக்குத்து
|திருவாலங்காடு அருகே இரு தரப்பினரிடையே ஏற்பட்ட மோதலில் 4 பேருக்கு கத்திக்குத்து விழுந்தது.
திருவள்ளூர் மாவட்டம் திருவாலங்காடு அடுத்த அரிச்சந்திராபுரம் கிராமத்தை சேர்ந்தவர் அமீத் பாஷா (வயது 58). இவர் அந்த பகுதியில் உள்ள மசூதியில் நிர்வாகியாக உள்ளார். இந்த நிலையில் நேற்று முன்தினம் தீம் நகரில் வசிக்கும் அப்துல் காதர் என்பவரின் மோட்டார் சைக்கிளை அதே பகுதியை சேர்ந்த அப்துல் ரகுமான் உள்பட 4 பேர் தீ வைத்து கொளுத்தி விட்டதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக இரு தரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்படும் சூழ்நிலை ஏற்பட்டது.
இதுதொடர்பாக அமித் பாஷா மேற்கண்ட இருதரப்பினரையும் அழைத்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். அப்போது கூட்டத்தில் வந்த அரிச்சந்திராபுரம் தீம் நகரை சேர்ந்த அப்துல்லா (23), அஷ்ரப் அலி (24), அப்துல் ரகுமான் (55), மாலிக் (28) ஆகிய 4 பேரும் தகாத வார்த்தைகளால் பேசி தாங்கள் மறைத்து வைத்திருந்த கத்தியால் அமீத் பாஷா, அஜ்மால், மஸ்தான் மற்றும் படாபா ஆகியோரை குத்தி விட்டு தப்பி சென்றனர். இதில் காயமடைந்த 4 பேரும் திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
இந்த சம்பவம் குறித்து அமீத் பாஷா திருவாலங்காடு போலீசில் புகார் செய்தார். போலீசார் இது சம்பந்தமாக மேற்கொண்ட 4 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.