செங்கல்பட்டு
மது போதையில் கல்பாக்கம் அருகே இரு தரப்பினர் மோதல்; மீனவர் படுகாயம்
|மது போதையில் கல்பாக்கம் அருகே இரு தரப்பினர் மோதலில் மீனவர் படுகாயம் அடைந்தார்.
செங்கல்பட்டு மாவட்டம், கல்பாக்கம் அடுத்த உய்யாலிகுப்பத்தை சேர்ந்தவர் ரகு (வயது 29), மீன்பிடி தொழில் செய்து வருகிறார். இவர் தனது நண்பர் திவாகர் என்பவருடன் அங்குள்ள தண்ணீர்பந்தல்மேடு என்ற இடத்தில் உள்ள டாஸ்மாக் கடை அருகில் மது அருந்தி கொண்டிருந்தார். அப்போது அதே தண்ணீர் பந்தல்மேடு பகுதியை சேர்ந்த சிலர் அங்கு மது அருந்தி கொண்டிருந்தனர். போதை அதிகமானதால் அவர்களுக்கும் ரகுவிற்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. வாய்த்தகராறு முற்றி இரு தரப்பிற்கும் கைகலப்பு ஏற்பட்டுள்ளது. அப்போது சிலர் அப்பகுதி வி.சி.க. நிர்வாகி குணா (வயது42) என்பவரை அங்கு வரவழைத்தனர்.
அங்கு வந்த குணா உள்பட 3 பேர் மீனவர் ரகுவை சரமாரியாக தாக்கினர். இதில் மீனவர் ரகுவிற்கு தாடை கிழிந்து, பற்கள் உடைந்து ரத்தம் கொட்டியது. படுகாயமடைந்த ரகு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார். பின்னர் தன்னை தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி சதுரங்கப்பட்டினம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் ரகுவை தாக்கிய விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நிர்வாகி குணா என்பவரை கைது செய்து திருக்கழுக்குன்றம் கோர்ட்டில் ஆஜர் படுத்தி மதுராந்தகம் கிளை சிறையில் அடைத்தனர்.