அரியலூர்
அரியலூர் அருகே இருதரப்பினர் இடையே மோதல்;ரூ.5 லட்சம், 12 பவுன் நகைகள் பறிப்பு
|அரியலூர் அருகே இருதரப்பினர் இடையே மோதல் ஏற்பட்டது. இதில் ரூ.5 லட்சம் மற்றும் 12 பவுன் நகைகள் பறிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் தொடர்பாக 12 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
விவசாயி
அரியலூர் மாவட்டம் விக்கிரமங்கலம் அருகே கோரைக்குழி தெற்கு தெருவை சேர்ந்தவர் தெய்வசிகாமணி (வயது 45), விவசாயி. இதேபோல் தெற்கு நரியங்குழி கிராமத்தை சேர்ந்தவர் தேவி (35). இந்தநிலையில் தெய்வசிகாமணியின் மருமகள் ராஜப்பிரியா, தேவியின் விவசாய நிலம் அருகே நிலம் வாங்கியதாக கூறப்படுகிறது.
இந்தநிலையில் ராஜப்பிரியா தான் புதிதாக வாங்கிய இடத்திற்கு சென்றுள்ளார். அப்போது தேவி தனது நிலத்தில் இருந்த முட்புதர்களை வெட்டி சுத்தம் செய்து கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. அப்போது அங்கு சென்ற ராஜப்பிரியா ஏன் எனது பகுதியில் உள்ள முட்களை வெட்டினாய் என்று கேட்டுள்ளார். இதனால் அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.
இருதரப்பினர் இடையே மோதல்
இதுகுறித்து தகவல் அறிந்த ராஜப்பிரியாவின் உறவினர்களான தெய்வசிகாமணி, முருகன், தேசிங்கு ராஜா, சங்கீதா ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். இதேபோல் தேவியின் உறவினர்களான ராஜாங்கம், காமராஜ், மாணிக்கம், சேகர், புஷ்பவல்லி, லட்சுமி ஆகியோர் அங்கு வந்தனர். அப்போது இரு தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு மோதல் ஏற்பட்டுள்ளது. இதில், ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர்.
இதில் படுகாயம் அடைந்த தெய்வசிகாமணி, ராஜப்பிரியா ஆகியோர் ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். அதேபோல் தேவி, ராஜாங்கம் ஆகியோர் அரியலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
நகை, பணம் பறிப்பு
இந்த சம்பவம் தொடர்பாக தெய்வசிகாமணி, தேவி ஆகியோர் விக்கிரமங்கலம் போலீசில் தனித்தனியாக புகார் அளித்தனர். இதில் தெய்வசிகாமணி தனது மோட்டார் சைக்கிள் டேங்க் கவரில் வைத்திருந்த ரூ.5 லட்சத்தை தேவி மற்றும் அவரது தரப்பினர் பறித்துசென்று விட்டதாக தெரிவித்துள்ளார். இதேபோல் தேவி தனது கழுத்தில் அணிந்திருந்த 12 பவுன் நகைகளை தெய்வசிகாமணி மற்றும் அவரது தரப்பினர் பறித்து சென்று விட்டதாக புகார் அளித்துள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பாக இருதரப்பை சேர்ந்த 12 பேர் மீது விக்கிரமங்கலம் சப்-இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.