< Back
மாநில செய்திகள்
அத்திமாஞ்சேரி பேட்டையில் இரு பிரிவினரிடையே மோதல்; 6 பேர் கைது
திருவள்ளூர்
மாநில செய்திகள்

அத்திமாஞ்சேரி பேட்டையில் இரு பிரிவினரிடையே மோதல்; 6 பேர் கைது

தினத்தந்தி
|
16 April 2023 2:13 PM IST

அத்திமாஞ்சேரி பேட்டையில் இரு பிரிவினரிடையே ஏற்பட்ட மோதல் தொடர்பாக 6 பேர் கைது செய்யப்பட்டனர்.

திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு தாலுகா அத்திமாஞ்சேரி பேட்டையில் நேற்று முன்தினம் தமிழ் புத்தாண்டையொட்டி ஒரு பிரிவினர் முருகபெருமானை வீதிஉலாவாக எடுத்து வந்தனர்.

அம்பேத்கர் பிறந்த நாளையொட்டி ஒரு பிரிவினர் அம்பேத்கர் பட ஊர்வலம் நடத்தினர். நேற்று முன்தினம் இரவு இந்த 2 ஊர்வலங்களும் அத்திமாஞ்சேரி பேட்டை பஜார் தெருவில் ஓரிடத்தில் சந்தித்தது. அப்போது இரு பிரிவினருக்கிடையே மோதல் ஏற்பட்டது. ஒரு சிலர் கல்வீச்சில் ஈடுபட்டனர்.

இந்த கல் வீச்சில் 5 பேர் படுகாயம் அடைந்தனர். மேலும் அண்ணா சிலை அருகே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பொக்லைன் எந்திரம், பள்ளி வேன், கார், ஆட்டோ உள்பட 6-க்கும் மேற்பட்ட வாகனங்கள் அடித்து நொறுக்கப்பட்டன. மேலும் கொடிவலசை ஊராட்சி மன்றம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமராக்கள் அனைத்தும் அடித்து நொறுக்கப்பட்டன. இதனால் அங்கு பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டது. இதைதொடர்ந்து அங்கு போலீசார் குவிக்கப்பட்டனர்.

நள்ளிரவு 12 மணி அளவில் திருவள்ளூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஷிபாஷ் கல்யாண் அங்கு சென்று நேரில் பார்வையிட்டார். அதிகாலை 2 மணிவரை இருந்து அவர் அங்கு அமைதி திரும்பியதும் திருவள்ளுர் திரும்பி சென்றார். இந்த சம்பவம் தொடர்பாக பொதட்டூர்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து அத்திமாஞ்சேரியை சேர்ந்த விஷ்ணு (வயது 28), விக்னேஷ் (24), கர்லம் பாக்கத்தை சேர்ந்த சந்தோஷ் (23), பிரவீன் (24), சந்துரு (19), சாய்கிரண் (22) ஆகியோரை கைது செய்தனர்.

இந்த சம்பவத்தில் காயமடைந்த அனைவருக்கும் அத்திமாஞ்சேரி பேட்டை ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சை அளிக்கப்பட்டது. தொடர்ந்து அதிக அளவில் போலீசார் குவிக்கப்பட்டு எந்தவித அசம்பாவிதமும் நடைபெறாத வண்ணம் கண்காணித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்