< Back
மாநில செய்திகள்
செந்துறையில் தி.மு.க.- அ.தி.மு.க.வினரிடையே மோதல்
அரியலூர்
மாநில செய்திகள்

செந்துறையில் தி.மு.க.- அ.தி.மு.க.வினரிடையே மோதல்

தினத்தந்தி
|
14 Oct 2023 11:57 PM IST

செந்துறையில் தி.மு.க.- அ.தி.மு.க.வினரிடையே‌ மோதல் ஏற்பட்டது. அப்போது கல்வீசி தாக்கியதில் போலீசார் உள்பட 3 பேர் காயம் அடைந்தனர்.

அ.தி.மு.க.- தி.மு.க. அலுவலகம்

அரியலூர் மாவட்டம் செந்துறையில் உள்ள அண்ணா சிலை அருகே வடக்கு புறம் அ.தி.மு.க. கட்சி அலுவலகமும், தெற்கு புறம் தி.மு.க. அலுவலகம் உள்ளது. தெற்கு-வடக்காக பழமையான தேரோடும் வீதி உள்ளது. இந்த நிலையில் அ.தி.மு.க. கட்சியினர் தங்களது அலுவலகத்தின் கிழக்கு பகுதியில் இருந்த சுற்றுச்சுவரை அகற்றி டீக்கடை வைக்க ஏற்பாடு செய்தனர்.

இதனை அறிந்த தி.மு.க.வினர் இந்த பாதையில் நாங்கள் கலைஞர் சிலை மற்றும் அமைச்சரின் தந்தை சிவசுப்பிரமணியன் சிலை அமைக்க திட்டமிட்டுள்ளோம். எனவே இந்த பக்கம் வாயிற்படி திறக்கக்கூடாது என்று எதிர்ப்பு தெரிவித்தனர்.

கல்வீச்சில் 3 பேர் காயம்

இந்த நிலையில் மீண்டும் டீக்கடை வைக்கும் பணியினை அ.தி.மு.க.வினர் தொடங்கினர். இதனால் ஆத்திரமடைந்த தி.மு.க.வினர் அ.தி.மு.க.வினரை அமைத்த கதவு மற்றும் தகர தடுப்புகளை அடித்து உடைத்து அகற்றினர். இதனைக்கண்ட அ.தி.மு.க.வினர் கடையை சேதப்படுத்தியவர்களை கைது செய்யக்கோரி சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது அங்கு வந்த போலீசார் அ.தி.மு.க.வினரை சமரசம் செய்ய முயன்றனர். அப்போது தி.மு.க.வினர் கல்வீச்சில் ஈடுபட்டனர்.

இதனைக்கண்ட அ.தி.மு.க.வினரும் கல்வீச்சில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதி போர்க்களம் போன்று காட்சி அளித்தது. இதனை தடுக்க முயன்ற போலீஸ் துணை சூப்பிரண்டு சங்கர் கணேஷ் கார் டிரைவர் ஆனந்தன் உள்பட 2 போலீசாரின் மண்டை உடைந்தது. அதேபோல் அ.தி.மு.க. வக்கீல் பிரிவை சேர்ந்த ராமசாமி என்பவரும் பலத்த காயமடைந்தார். இதனால் செந்துறையில் பெரும் பதற்றம் ஏற்பட்டது.

போலீசார் குவிப்பு

அதனைத்தொடர்ந்து கூடுதல் போலீசார் வரவழைக்கப்பட்டு மோதலை கட்டுக்குள் கொண்டு வந்தனர். பின்னர் கல்வீச்சில் இடுபட்டவர்களை போலீசார் மடக்கி பிடித்தனர். அரியலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பெரோஸ்கான் அப்துல்லா தலைமையில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த நிலையில் அ.தி.மு.க. மற்றும் தி.மு.க. நிர்வாகிகள் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து 2 அலுவலகங்களையும் மூடி போலீசார் தொடர்ந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும் செய்திகள்